சிறந்த ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருதை வென்ற முதல் பெண்
சினிமா
ஆஸ்கர் விருதுப் பட்டியலில், இவ்வளவு காலமும் சிறந்த ஒளிப்பதிவு என்ற விருதுக்கு ஆண்களே சொந்தக்காரர்களாக இருந்து வந்த நிலையில், முதல் முறையாக ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் இந்த நிலையை மாற்றி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவுக்கு சின்னர்ஸ் (Sinners) திரைப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்காக ஆஸ்கர் விருதை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆஸ்கர் விருது வரலாற்றில், இந்த விருதினைப் பெறும் முதல் பெண் என்ற பெருமையையும் அடையாளத்தையும் ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் பெற்றுள்ளார்.
மிஸிஸிபியில் கடந்த 1930-களின் வழக்கத்தில் இருந்த காட்டேரி கதைகளை, "சின்னர்ஸ்" படத்தில் செட் அமைத்து அதனை குறிப்பிடத்தக்க பாணியில் காட்சிப்படுத்தியிருந்தமைக்காக குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது விழாவில் டூரால்ட் அர்க்காபாவ் பேசுகையில், ஹாலிவுட் திரையுலகில், கேமராக்களுக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பிரதிநிதித்துவம் கவனம் பெறுவதில் மகிழ்சியடைவதாகவும், என்னை நம்பி இந்த படத்தை வழங்கிய தன்னுடைய திரைப்பட இயக்குநர் கூக்ளருக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
விருதினை பெற்றப்பின்னர் ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிடுகையில், என்னைப் போன்ற ஆசை கொண்ட பல சிறுமிகள் இன்றிரவு நன்றாக தூங்குவார்கள், ஏனென்றால் அவர்கள் ஒளிப்பதிவாளர்களாக மாற விரும்புகிறார்கள்.
இந்த மேடையில் நான் இருப்பது, இந்த விருது அல்லது திரைப்படத்துக்கான விருது பெறுவது, பல பெண்களின் வாழ்க்கையை மாற்றும் என்பதை நான் நன்கு அறிவேன், ஏனென்றால் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல சிறுமிகள் இதுவரை இல்லாத வகையில் புதிய உத்வேகம் பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தன்னுடைய இந்த வெற்றிக்கு காரணமாக நின்ற அனைத்து பெண்களுக்கும் தான் நன்றி சொல்ல விரும்புவதாகவும், இந்த விருது பெறும்வரைதான் அது எனக்குத் தொடர்புடையது, இனி இந்த விருது என்னைப் பற்றியது அல்ல. இது இன்னும் பலவற்றைப் பேசும். அது எனக்கு நன்றாகவே தெரியும் எனவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.





















