ஈரானின் எச்சரிக்கையால் பதற்றம் - ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க சர்வதேச நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு
ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பதற்கு, அமெரிக்காவுடன் இணைந்து கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஈரான் இந்த வழியை மூட முயன்ற போதிலும், ஏதோ ஒரு வழியில் ஹோர்முஸ் நீரிணையை விரைவில் பாதுகாப்பானதாகவும், சுதந்திரமானதாகவும் திறப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகின் மொத்த மசகு எண்ணெய் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பாதை ஊடாகவே நடைபெறுகிறது. இந்தப் பாதை முடக்கப்படுவது உலகளாவிய எரிபொருள் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர், இந்த நீரிணையைத் தொடர்ந்து முடக்கி வைக்கப்போவதாக சபதம் செய்துள்ளார்.
ஈரானின் "எதிரிகளுக்கு" மட்டுமே இந்தப் பாதை மூடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், போர் ஆரம்பித்தது முதல் இதுவரை வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளில் பயணித்த 16 கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.






















