பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள் - QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை
இலங்கை
நாட்டில் நிலவும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி மற்றும் அதனைச் சீர்செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இனி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (CTB) சொந்தமான டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றிப் பேணுவதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு, பொதுமக்கள் அநாவசியமான பயணங்களைத் தவிர்க்குமாறும், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
மொரட்டுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தேவையற்ற எரிபொருள் பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே QR குறியீடு வைத்திருப்பவர்கள், அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் பட்சத்தில் எவ்விதச் சிக்கலுமின்றி அதனைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.
வாகனம் அல்லது தொலைபேசி இலக்கத்தை மாற்றியவர்கள் மற்றும் புதிய வாகன உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க விசேட தொழில்நுட்பப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான முக்கிய முடிவுகள் இன்று (15) பிற்பகல் எடுக்கப்படவுள்ளன.
எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்தி, பதுக்கல் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.






















