மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்றுமதித் துறைகளுக்கு பாதிப்பு
இலங்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, நாட்டிற்கு வருகை தரவிருந்த 768 விமானப் பயணங்கள் இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 30வீத வீழ்ச்சி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் நாட்டின் ஏற்றுமதித் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
மொத்த ஏற்றுமதியில் சுமார் 8 சதவீதத்தை மத்திய கிழக்கு பிராந்தியம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அதன் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
இந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால், ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 35 சதவீத தேயிலையை வேறு நாடுகளுக்கு திசைதிருப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






















