• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் ஆட்சியாளர்களுடன் தொடர்பு - 239 விசாக்களை ரத்து செய்த கனடா

ஈரான் அரசாங்கத்தின் உயர்மட்டப் புள்ளிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருடன் தொடர்புடைய 239 நபர்களின் பயண விசாக்களை கனடா ரத்து செய்துள்ளது.

ஈரான் ஆட்சியாளர்கள் கனடாவை ஒரு 'பாதுகாப்பான புகலிடமாக' பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் (CBSA) வெளியிட்டுள்ள மார்ச் 5-ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஈரானிய அதிகாரிகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய 239 பேரின் விசாக்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்ட 32 பேருக்கு கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் 'புரட்சிகர காவல்படை' (IRGC) அமைப்பை ஏற்கனவே கனடா ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் ஆட்சியின் சந்தேகத்திற்குரிய உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிரான கனடாவின் கடுமையான நிலைப்பாடு தொடர்கிறது.

அவர்கள் கனடாவில் புகலிடம் தேடுவதைத் தடுக்க கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியிலும் கனடா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சுமார் 110,000 கனடியர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி 28 முதல் இதுவரை சுமார் 8,000 கனடியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கனடா திரும்பியுள்ளனர். 
 

Leave a Reply