காலாவதியான உளவுத் தகவலால் ஈரான் பள்ளி மீது தாக்குதல் - உள் விசாரணை நடத்தும் அமெரிக்க ராணுவம்
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது.
பிப்ரவரி 28 அன்று தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள 'ஷஜாரா தயாபா' பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 175 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
பள்ளி மீதான தாக்குதல் அமெரிக்க ஏவுகணையால் நடத்தப்பட்டது என்று தகவல் வெளியானது. ஆனால் பள்ளியை ஈரான் ராணுவமே தாக்கியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே 175 சிறுமிகள் கொல்லப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்க இராணுவமே நடத்தியதற்கான வீடியோ மற்றும் செயற்கைகோள் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகின.
தாக்குதலுக்கு உள்ளான பள்ளியின் வீடியோ மற்றும் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், இது அமெரிக்காவின் 'டோமாஹாக்' (Tomahawk) குரூஸ் ஏவுகணை என்பது வீடியோ மூலம் தெரிய வந்தது.
அருகிலுள்ள ஈரானிய இராணுவத் தளத்தைத் தாக்கும் போது அமெரிக்க இராணுவம் தவறுதலாக பள்ளிக் கட்டிடத்தைக் குறிவைத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஈரான் பள்ளி தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவம் உள் விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்க அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தியதாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்க இராணுவமே இந்த தாக்குதலை நடத்தியது அம்பலமாகியுள்ளது.
ஆரம்பக்கட்டத் தகவல்களின்படி, காலாவதியான தவறான உளவுத் தகவல் காரணமாகவே இந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
அந்தப் பள்ளி முன்பு அந்த ராணுவ தளத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்றும் அது பின்னர் பிரிக்கப்பட்டதை அறியாமல் புலனாய்வு அமைப்பு (INTEL) வழங்கிய காலாவதியான உளவுத்துறைத் தரவைப் பயன்படுத்தி அமெரிக்க மத்திய கட்டளை அதிகாரிகள் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.























