அமெரிக்காவில் அதிசயம் - 6 ஆண்டுகளின் முன் காணாமல் போன சிறுமி மீட்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல் போன சிறுமி ஒருவர், வடக்கு கரோலினா மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி மீட்கப்பட்டமையானது அதிகாரிகளின் நீண்ட கால தேடுதல் வேட்டைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
நீண்ட கால தேடுதல் வேட்டைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் திகதி, கலிபோர்னியாவின் துவார்டே (Duarte) பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியான கரேன் ரோஜாஸ் மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார்.
லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையினர் இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வந்த போதிலும், பல ஆண்டுகளாக சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வடக்கு கரோலினாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாடசாலையில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அங்கு கரேன் ரோஜாஸ் இருப்பதை உறுதி செய்த காவல்துறை அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை அவரைப் பத்திரமாக மீட்டனர். தற்போது 11 வயதாகும் அந்தச் சிறுமி, கடந்த 6 ஆண்டுகளாகத் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து, வேறு ஒரு பெயரில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் "மிகப் பழைய வழக்குகளில் இது போன்ற நேர்மறையான முடிவுகள் கிடைப்பது மிகவும் அரிது. அதிகாரிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பே இந்த வெற்றிக்குக் காரணம்" என வொஷிங்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ள காவல்துறையினர், அவரது எதிர்காலம் மற்றும் மறுவாழ்வு குறித்து தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுமி மீட்கப்பட்டதன் மூலம் இந்த நீண்ட கால வழக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.























