• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அல்-அக்ஸா விவகாரம் - 8 இஸ்லாமிய நாடுகள் கூட்டாக கண்டனம்

புனித ரமலான் மாதத்தில் அல்-அக்ஸா பள்ளிவாசல் மற்றும் ஹராம் அல்-ஷெரீப் வளாகத்தின் வாயில்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் மூடி வருகின்றமைக்கு பல இஸ்லாமிய நாடுகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, கட்டார், துருக்கி, எகிப்து, ஜோர்தான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

பழைய ஜெருசலேம் நகர் மற்றும் புனிதத் தலங்களுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் சர்வதேச சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் வழிபாட்டு சுதந்திரக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் செயல் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அல்-அக்ஸா பள்ளிவாசல் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இத்தகைய ஆத்திரமூட்டும் நடைமுறைகளை முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர்கள், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் மற்றும் அங்குள்ள இஸ்லாமிய, கிறிஸ்தவ புனிதத் தலங்கள் மீது இஸ்ரேலுக்கு எந்தவித இறையாண்மையும் இல்லை என்பதையும் உறுதியாக வலியுறுத்தினர்.

அல்-அக்ஸா பள்ளிவாசல் வளாகம் முழுமையாக முஸ்லிம்களுக்கான பிரத்தியேக வழிபாட்டுத் தலம் என்றும், அதன் விவகாரங்களை நிர்வகிக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் ஜோர்தானிய அவ்காஃப் அமைச்சகத்துடன் இணைந்த ஜெருசலேம் வக்ஃப் நிறுவனத்திற்கே உள்ளது என்றும் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

ஆக்கிரமிப்பு சக்தியாகச் செயற்படும் இஸ்ரேல், பள்ளிவாசல் வாயில்களை மூடுவதை உடனடியாக நிறுத்தி, வழிபாட்டாளர்கள் தடையின்றி உள்ளே நுழைவதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஜெருசலேமில் உள்ள புனிதத் தலங்களுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் சட்டவிரோத நடைமுறைகளைத் தடுக்க சர்வதேச சமூகம் தீர்க்கமான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
 

Leave a Reply