அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை
இலங்கை
இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகம் மற்றும் கியூஆர் (QR) முறைமை தொடர்பான சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பங்களில் மட்டுமே QR முறையைப் பயன்படுத்தி விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், QR முறையைப் பயன்படுத்த வேண்டிய எவ்விதத் தேவையும் இல்லை என அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவானால் மட்டுமே அதனைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய தினமும் (02) வழமை போன்று எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.45 மணி வரை:
டீசல்:29 இலட்சத்து 25 ஆயிரத்து 349 லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோல்: 29 இலட்சத்து 4 ஆயிரம் லீற்றர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (01) சுமார் 30 இலட்சம் லீற்றர் டீசலும், 39 இலட்சம் லீற்றர் பெற்றோலும் சந்தைக்கு விடுக்கப்பட்டதாக அவர் புள்ளிவிபரங்களுடன் விளக்கமளித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அநாவசியமாகப் பதற்றமடைந்து மக்கள் வரிசைகளில் காத்திருப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த தலைவர், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என வலியுறுத்தினார்.
தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார்.
அனுமதிப்பத்திரமின்றி வீடுகளில் எரிபொருளைப் பதுக்கி வைப்பது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது என அவர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு பதுக்குபவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், நேற்றைய தினம் இது தொடர்பாகச் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் பதுக்கல் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.






















