• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குதிரைச் சவாரியிலும் நிகரற்ற வீரனாகத் திகழ்ந்தவர் நடிகர் திலகம்

சினிமா

நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், வெறும் வசனங்களால் மட்டுமல்ல, விறுவிறுப்பான குதிரைச் சவாரியிலும் நிகரற்ற வீரனாகத் திகழ்ந்தவர். எழுபது வயதிலும் அமெரிக்காவில் கௌபாய் வேடத்தில் அவர் கொடுத்த அந்தப் புகைப்படம், இன்றும் சமூக வலைதளங்களில் 'மாஸ்' காட்டி வருகிறது. குதிரையை அடக்குவது கலை என்றால், அந்தப் புரவியின் மீதேறிப் புயலாகப் பாய்ந்தவர் சிவாஜி.
உத்தமபுத்திரன்:
ரதத்தில் தப்பும் விக்ரமனை பார்த்திபனாகச் சிவாஜி துரத்தும்போது, திரையில் அனல் பறக்கும்!
வீரபாண்டிய கட்டபொம்மன்: குதிரை மிரண்டு எங்கோ ஓடியும், அஞ்சாமல் அதை அடக்கித் திரும்பிய சிங்கத்தமிழன் அவர். ஆங்கிலேயரை எதிர்த்து அவர் குதிரையில் சீறும் கம்பீரம் இன்றும் ஒரு பாடம்!
இரு துருவம் & என் மகன்: ரயிலுக்கு இணையாக, இன்னும் சொல்லப்போனால் ரயிலையே முந்தும் வேகத்தில் குதிரையை விரட்டுவார். இரண்டு ரயில்களுக்கு இடையே அவர் பாய்ந்து வரும்போது தியேட்டரே அதிரும்!
சித்தூர் ராணி பத்மினி: குதிரை ஒரு பக்கம் துள்ளிக்குதிக்க, அதன் பிடியை விடாமல் அனல் கக்கும் வசனங்களை அவர் பேசியது ஒரு 'மாஸ்டர் கிளாஸ்'!
ஸ்டைலும் லாவகமும்!

சுமதி என் சுந்தரி (அறிமுகக் காட்சி): மலைப் பிரதேசத்தின் தேயிலைத் தோட்டங்கள். வளைந்து நெளிந்து செல்லும் அந்த மிகக்குறுகிய ஒற்றையடிப் பாதையில், குதிரையின் மீது ஒரு ராஜகுமாரனைப் போல சிவாஜி கணேசன் அமர்ந்து வருவார். வெறும் சவாரி மட்டுமல்ல, அந்த ரம்மியமான சூழலில் குதிரையின் வேகத்தை ஒரு தாளலயத்தோடு கட்டுப்படுத்தி, உடலை வளைத்து அவர் காட்டும் அந்த ஸ்டைல்... ‘கிளாஸ்’ ரகம்! குதிரைக்கும் அவருக்குமான அந்த ‘கெமிஸ்ட்ரி’ அத்தனை அழகாக இருக்கும்.
படித்தால் மட்டும் போதுமா : "ஓஹோஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்" - இந்தப் பாடலில் சிவாஜியின் குதிரை சவாரி ஒரு பாடம். சமதளத்தில் ஓடுவது எளிது, ஆனால் மேடு பள்ளங்கள் நிறைந்த பாதையில் குதிரை ஏறி இறங்கும் போது, அதன் குலுக்கலுக்கு ஏற்பத் தன் உடல் அசைவுகளைச் சீராக வைத்துக்கொண்டு, முகத்தில் சிரிப்பு மாறாமல் அவர் பாடும் விதம் அசாத்தியமானது. குதிரையை எப்படித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, எப்போது லேசாகத் தளர்வு கொடுக்க வேண்டும் என்ற நுணுக்கங்கள் இந்தப் பாடலில் அப்பட்டமாகத் தெரியும்.
சாகசம்... சபாஷ்!
தர்மம் எங்கே: கோட்டைக்குள் குதிரையோடு புகுந்து அவர் காட்டிய தோரணை அசாத்தியம்.
சித்ரா பௌர்ணமி & புண்ணிய பூமி: காடு, மலை, வெள்ளம் என எதற்கும் அஞ்சாத சீற்றம். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களுக்கே சவால் விடும் வேகம்!
நாம் பிறந்த மண்: போலீஸ் ஜீப்பையே தன் குதிரை வேகத்தால் திணறடித்திருப்பார். யானை பாஷை மட்டுமல்ல, குதிரை பாஷையும் அவருக்கு அத்தப்படியென நிரூபித்த படம்!
சுருக்கமான உண்மை:
குதிரையை எங்கே சுழற்ற வேண்டும், எப்படி நிறுத்த வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர். வேகம் எடுக்கும்போது கூடத் தன் 'ரியாக்ஷனில்' கோட்டை விடாத அந்த அர்ப்பணிப்புதான் அவரை 'குதிரை சவாரியின் ஏகச்சக்ராதிபதி' ஆக்கியது!

 

செந்தில்வேல் சிவராஜ்

Leave a Reply