• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி - ஏ.பி.என் இணையின் கலைக் காவியக் கீர்த்தனை

சினிமா

பல்லவி:
நடிப்பெனும் கடலும் - இயக்கமெனும் மலையும்
இணைந்து உருவாக்கிய - திரைப்பாற்கடல் அமுதம் இதுவல்லவோ!

அனுபல்லவி:
தமிழ்ப் பண்பாடும் - ஆன்மீகப் பெருக்கும்
திரையில் தவழ்ந்த - தெய்விகத் தொடக்கமிதே!
'நான் பெற்ற செல்வம்' எனத் தொடங்கி
இருபத்தி ஆறாவது - படமாக சிவாஜிக்கு அமைந்த
இணையற்ற தொடக்கமதுவே!

சரணம் 1:
'திருவிளையாடல்' - நக்கீரனுக்கு
நான் பெற்ற செல்வத்தில் வித்திட்ட
சிவாஜி தரித்திட்ட
நக்கீரனாய் ஈசனாய் -பின்
தொடர்ந்தது 'மக்களைப் பெற்ற மகராசி'
முப்பத்தி ஆறாவது - படமாய் வந்து நின்று
முழுக்க முழுக்க - கொங்குத் தமிழ் பேசி
வட்டார வழக்கிற்கு - இந்தியத் திரையில் முதல்
வரலாறு படைத்ததே!
மணப்பாறை மாடுகட்டி - எனப் பாடல்கள் முழங்கியதே

சரணம் 2:
'வடிவுக்கு வளைகாப்பு' - எண்பதாவது படமாக
சாவித்திரி இணைய - சரித்திரம் தொடர்ந்தது
'குலமகள் ராதை' - எண்பத்தி எட்டாவது காவியம்
தேவி சரோஜா- தேவிகா - இருவருடன் சிவாஜி
'இரவுக்கு ஆயிரம் கண்கள்' - 'உன்னைச் சொல்லி குற்றமில்லை'
எனத் தேவாமிர்தப் பாடல்கள் - திசையெங்கும் ஒலித்ததே!

சரணம் 3:
உலக கலைஞர்க்கெல்லாம் மகா சவால் விடுத்து
ஒன்பது வேடங்களில் -'நவராத்திரி'யில் விஸ்வரூபம்
நடிப்பிற்கும் நடிகனுக்கும் - போட்டியென முழங்கி
நூற்றி நான்காவது - 'திருவிளையாடல்' கண்டாரே!

கண்ணதாசன் குரல் - நக்கீரனுக்குப் பொருந்தாதென
நாகராஜனை - நக்கீரனாய் சிவாஜி மாற்ற
"நீங்கள்தான் சிவன்" - என்று நாகராஜன் சவால் விட
பக்தி வெள்ளத்தில் - தமிழகமே திளைத்ததே!

சரணம் 4:
நூற்றி எட்டாவது - 'சரஸ்வதி சபதம்' நாரதனாய்
கல்வியா செல்வமா வீரமா - விவாதம் செய்தாரே!
நூற்றி பத்தாவது - 'கந்தன் கருணை' வீரபாகுவாய்
கம்பீரத் தமிழுக்கு - இலக்கணம் சொன்னாரே!
நூற்றி பதினைந்து - 'திருவருட்செல்வர்' நாவுக்கரசராய்
மகா பெரியவரையே - வியப்பில் ஆழ்த்தினாரே!
'திருமால் பெருமை'யில் - ஆழ்வார்களாய் மாறி
திவ்யப் பிரபந்தப் - புகழைப் பாடினாரே!

சரணம் 5:
நூற்றி இருபத்தி இரண்டாம் - 'தில்லானா மோகனாம்பாள்'
சிக்கல் சண்முகசுந்தரமாய் - நாதஸ்வரம் வாசித்து
பன்னாட்டு நிறுவனமும் - உரிமையைப் போட்டிப் போட்டுப் பெற்ற
அதிசயப் படைப்பல்லவோ!
'குரு தட்சணை' வழங்கி - 'விளையாட்டுப் பிள்ளை'யாய்
ஜல்லிக்கட்டு காட்டி - கபடி ஆடித் திளைத்து
நூற்றி அறுபத்தி இரண்டாம் - 'ராஜராஜ சோழன்'
ஆயிரம் ஆண்டுகளை - நம் கண்முன் நிறுத்தி
-தன் பொற்காலத்தை நிறைத்ததே!

வாழி மங்களம்:
என்றும் பதினாறு கலைகளும் செழிக்க
சிவாஜியின் நடிப்பும் - நாகராஜன் இயக்கமும்
மண்ணுள்ள வரை - மக்கள் மனதில் வாழி!
பக்திப் பெருக்கும் - பைந்தமிழ் மணமும்
திரையெனும் ஆலயத்தில் - நிலைபெற்று வாழி!

நடிப்பெனும் இலக்கணத்திற்கு - ஒரு சிவாஜி!
இயக்கமெனும் இலக்கியத்திற்கு - ஒரு ஏ.பி.என்!
இரு துருவங்கள் இணைந்து - தமிழுக்குச் சூட்டிய
இந்த 'மகா கீர்த்தனை' - காலமெல்லாம்
கலை ரசிகர்களின் - செவிகளில் தேனாய் வழியட்டும்!
இசைத் தட்டுக்கள் சுழலும் வரை - இவர்தம் புகழ் ஓங்குக!

செந்தில்வேல் சிவராஜ்


 

Leave a Reply