ஜன நாயகன் - மேல்முறையீட்டு மனுவை திங்கள் கிழமை விசாரணைக்கு எடுக்க தணிக்கை வாரியம் முறையீடு
சினிமா
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்த தணிக்கை வாரியம் அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்பட்டது.
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. மத்திய தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி அமர்வில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் முறையீடு செய்தார்.
தாங்கள் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தணிக்கை வாரியம் முறையீடு செய்தது.
மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவிக்கவும், அதனை விசாரணைக்கு எடுப்பது குறித்து பிற்பகலில் பரிசீலிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.






















