• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சகலகலா வல்லவன் படத்தில் மாற்றி வைத்த இளையராஜா - 31 ஆண்டுக்கு பின்னும் ஹிட்டான பாட்டு

சினிமா

1951-ல் வந்த ஹிட் பாடல்; சகலகலா வல்லவன் படத்தில் மாற்றி வைத்த இளையராஜா: 31 ஆண்டுக்கு பின்னும் ஹிட்டான பாட்டு!

’சகலகலா வல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சூப்பர் ஹிட் பாடலில் இளையராஜா செய்த வித்தையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏ.வி.எம் நிறுவனத்தில் உதவி இயக்குனராக இருந்த எஸ்.பி.முத்துராமன் கடந்த 1972-ல் 'கனிமுத்து பாப்பா' என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘பெத்த மனம் பித்து' உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இவர் இயக்கிய 70-க்கும் மேற்பட்ட படங்களில் 90 சதவிகித படங்கள் வணிக ரீதியாக வெற்றியை பெற்றன. இதனால் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கமர்ஷியல் கிங் என அழைக்கப்பட்டார்.

கமலைத் தூக்கிக் கொஞ்சி நடிப்பு கற்றுத்தந்த பெருமைக்குரிய இவர், இயக்குனர் பாலச்சந்தரின் கண்டுபிடிப்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திறமைக்கேற்ற வேடங்களைத் தந்து அவரின் நடிப்புத் திறமையை பட்டை தீட்டி திரையுலக வானில் மின்னவைத்தவர் என்ற பெருமையையும் கொண்டவர்.

கடந்த 1982-ல் ஏ.வி.எம் நிறுவனம் சார்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய கமலின் 'சகலகலா வல்லவன்' படம் அதுவரை தமிழில் வெளியான அனைத்துப் படங்களின் வசூல் சாதனையையும் உடைத்தது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் சாதனையை 1989-ஆம் ஆண்டு வரை எந்த படத்தாலும் முறியடிக்க முடியவில்லை. இந்த படத்தில் அம்பிகா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசையில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது.

இந்நிலையில், ‘சகலகலா வல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கட்ட வண்டி கட்ட வண்டி’ பாடல் எப்படி உருவானது என்பது குறித்து தயாரிப்பாளர் ஏ.வி.எம். குமரன் மனம் திறந்துள்ளார். சித்ரா லட்சுமணன் உடனான நேர்காணலில் இவர் பேசியதாவது, “எந்த பாட்டு கேட்டாலும் உடனே என் மனதில் பதிந்துவிடும். ‘சகலகலா வல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கட்டவண்டி கட்டவண்டி’ பாடல் சிட்டிவேசன் போன்று ‘சம்சாரம்’ என்ற பழைய படத்தில் ஒரு சிட்டிவேசன் இருக்கும்.

அந்த படத்தில் கதாநாயகி ‘கட கட வண்டி... மாடு ரெண்டும் சண்டி’ என்று பாடுவாள். இந்த பாடலை நான் இளையராஜாவிடம் பாடி காண்பித்தேன். அவர் நன்றாக இருக்கிறது அதையே நான் மாற்றிக் கொடுத்துவிடுகிறேன் என்றார். அப்படி உருவான பாடல் தான் ‘கட்ட வண்டி கட்ட வண்டி காப்பாத்த வந்த வண்டி’ பாடல்” என்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேன்மொழி

Leave a Reply