கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும்
சினிமா
“காமராஜரின் பிறந்த தின விழாவில் நானும் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தி, அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன். தலைவர் காமராஜர், தோழர் காமராஜர், அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார். எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர்; பாராட்டப்பட வேண்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும். மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும். நல்லவனை நல்லவன் பாராட்ட வேண்டும்.
கொள்கைக்காக வாழ்கிறவனை, கொள்கைக்காக வாழ்கிறவர்கள் பாராட்டியாக வேண்டும். யார் யாரை மதிக்கிறார்களோ அவர்களைப் பாராட்ட வேண்டும். யாரால் மதிக்கப்படுகிறார்களோ அவர்களைப் பாராட்டியாக வேண்டும். இந்த நிலை மாறும்போது அருவருப்பான சூழ்நிலை ஏற்படுகிறது.
நண்பர் சிவாஜி கணேசன் ஒரு கட்சியில் (தி.மு.க.) இருந்து விட்டுப்போனவர். அவருடைய ‘கட்டபொம்மன்’ நாடகத்திற்கு எங்கள் தலைவர் அண்ணா போய் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார். சிவாஜி நம்மை விட்டுப்போய்விட்டாரே என்ற எண்ணத்திற்கே அங்கு இடமில்லை. அதுதான் நல்ல பண்பு.
காமராஜர் என்னை விட்டுப்போகவில்லை. நான் அவரைவிட்டு வந்தவன் (எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்தவர்). நான் காமராஜரைப் பாராட்டிப் பேச வந்ததற்கு வேறு உள் காரணங்கள் தேடினாலும் கிடைக்காது. காமராஜர் வாழ்ந்தால் யாருக்கு லாபம்? வாழாமல் இருந்தால் யாருக்கு லாபம்? காமராஜர் ஒரு ஏழையாக வளர்ந்திருக்கிறார். யாரும் மேடையில் ஏறி அவர் சொத்து சேர்த்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. தன்னை ஈன்றெடுத்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அவரை 10 நிமிடங்கள், 5 நிமிடங்களுக்கு மேல் இருந்து பார்ப்பதில்லை.
தன் தாயை ஈன்ற இந்த நாட்டின் கடமைகளை விடாமல் செய்து வருகிறார். காமராஜரைப் புகழ்வதில் யாருக்கு நஷ்டம்? நான் ஒரு கலைஞன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். அண்ணா வழியில் நடப்பவன். அவர் கொள்கை எனது உயிர். அப்படிப்பட்ட நான் காமராஜரையும், அய்யாவையும் (பெரியார்) பாராட்டாமல் வேறு யாரைப் பாராட்ட முடியும்?
இதே மேடையில்தான் பெரியாரைப் பாராட்டிப் பேசினேன். நமது தலைவர் காமராஜரைப் பாராட்டிப் பேசுகிறேன். நமது தலைவர் என்று நான் சொல்வது மக்கள் ஏற்ற தலைவர் அவர். அதனால் நமது தலைவர் என்று சொல்கிறேன். காமராஜர் இரவு-பகல் பாராமல் பாடுபடுகிறார். அவரை ஏன் பாராட்டக் கூடாது? என் கொள்கையை நான் கடைப்பிடிப்பதிலும் ஏன் இந்த இலக்கணத்தை பின்பற்றக்கூடாது? எங்கெங்கு நல்லது இருந்தாலும் அதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உயர்ந்த நிலையை உருவாக்கித் தந்தவர் காமராஜர். ஏழைகளை வாழவைக்க வேண்டும் என்று காமராஜர் சொல்கிறார். நானும் அதைத்தான் சொல்கிறேன். என் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. அதனால் அவருக்கு மாலையிடுகிறேன்."
- 1965 ஆம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் நடந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆற்றிய உரையிலிருந்து
























