தனிமை சிறையில் இம்ரான்கானை அடைத்து சித்ரவதை - பாகிஸ்தான் எம்.பி. குற்றச்சாட்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவரை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே சிறையில் இம்ரான்கான் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால் சிறையில் இம்ரான்கான் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் இம்ரான் கானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி எம்.பியான குர்ராம் ஜீஷன் கூறியதாவது:-
பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இம்ரான்கானின் புகழைக் கண்டு பயப்படுகிறார்கள். இதனால்தான் அவரது படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட அனுமதிக்கவில்லை. அவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதமாகி விட்டது. அவரை சந்திக்க குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.
கடந்த சில நாட்களில் எங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இம்ரான்கான் உயிருடன் இருக்கிறார். தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்து உள்ளனர்.
பாகிஸ்தான் அரசாங்கம் இம்ரான்கானுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கிறார்கள். அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள். அவர் வெளிநாடு சென்று அவர் விரும்பும் இடத்தில் அமைதியாக இருந்தால் அவருக்கு சலுகைகள் கூட வழங்குவதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.
ஆனால் அதை இம்ரான் கான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் இம்ரான்கானின் செல்வாக்கு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.























