கனடிய நயினாதீவு நாகம்மாள் ஆலயத்தின் திருக்குட முழுக்கு விழா
கனடா
--5644 Elgin Mills RD Eஇல் அமைந்துள்ள புதிய நிலப்பரப்பில் கனடிய நயினாதீவு நாகம்மாள் ஆலயத்தின் திருக்குட முழுக்கு விழா ( மகா கும்பாபிஷேகம்) 30 நவம்பர் 2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 9.00 மணி முதல் 11.00 மணி வரையான சுபமுகூர்த்தத்தில் மிகச் சிறப்பாக பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் இனிதே நிறைவேறியுள்ளது.
28, 29ம் திகதிகளில் இடம்பெற்ற எண்ணைக்காப்பு சாத்துதல் நிகழ்வின் போதும் சரி திருக்குட முழுக்கு (மகாகும்பாபிஷேகம்) நிகழ்வின் போதும் சரி நாட்டில் நிலவும் கடும் குளிரையும் பனிப்பொழிவையும் பனி மழையையும் பொருட்படுத்தாமல் அந்தணச் சிவாச்சாரியார்களும் சரி அடியார்களும் சரி ஆசாரசீலர்களாக - ஆலய விதிமுறைகள் - நடைமுறைகளைக் கடைப்பிடித்து இப்பெரும் கைங்கரியத்தைச் செய்து முடித்ததை எண்ணிப் பெருமை கொள்ள வேண்டும்.
கனடிய மண்ணில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நயினாதீவு நாகபூஷணி அம்பாளைத் தங்களது குலதெய்வமாகக் கொண்ட மண்ணின் மைந்தர்கள் சிலர் அன்று எம்தேசத்தில் நிலவிய போர்ச் சூழல் - பாதுகாப்புக் கெடுபடிகளால் ஊருக்குச் சென்று வழிபட முடியாத காரணத்தினால் வாழுகின்ற கனடிய மண்ணில் அம்பாளுக்கென்று ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்ற பெரு விருப்பின் காரணமாக உந்தப் பட்டு உருவானதே கனடிய நயினாதீவு நாகம்பாள் ஆலயம் ஆகும்.
முதலில் ஸ்காபரோவில் அமைந்திருந்த ஆலயம் அம்பாளுக்கான நிரந்தர இடமில்லை என்பதால் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இன்று அம்பாள் குடிகொண்டிருக்கும் நிலம் வாங்கப்பட்டது. ஆலய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் உலகத்தையே புரட்டிப் போட்ட கொரனா தொற்றுநோய் காரணமாக அரச நிர்வாகங்கள் ஸ்தம்பித்ததும் - ஆலய நிர்வாகத்திற்கு ஏற்பட்ட பண முடக்கமும் காலதாமதத்திற்கு காரணமாக அமைந்தது என்பதை யாரும் மறக்க முடியாது.
இருந்த போதும் ஆலய நிர்வாகம் மட்டுமல்ல அம்பாள் அடியார்கள் அபிமானிகள் பக்தர்கள் என அனைவரும் எடுத்த கூட்டு முயற்சியின் பலனாக மார்க்கம் நகரில் அனைத்து சட்டதிட்டங்களுக்கும் அமைவாக முதன் முதலாக உருவாகிய இந்துக் கோவில் என்ற பெருமையோடு எங்கள் அன்னை நாகபூஷணி அம்பாள் தனது நிரந்தக் காணியில் அருள்பாலிக்க உள்ளார்.
உள்ளம் நிறைந்து பேருவகை கொள்ளும் இந்நேரத்தில் கனடிய நாகம்பாள் ஆலயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் அது ஈழம்வாழ் இந்துக்களில் பொது ஆலயமாகத் திகழ வேண்டும் என்ற தூர நோக்கோடு முன்னின்று செயலாற்றிய அண்ணர் நாகேசு சிவராஜசிங்கம் பெரியவர் கு.வை.முத்தையா, கனகரெத்தினம் புவனேஸ்வரன், சபாரெத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா, நல்லையா துரைராஜா போன்றவர்கள் இன்று எம்மிடையே இல்லை என்னும் போது நெஞ்சு கனக்கின்றது. அவர்களுடைய ஆத்மாக்கள் எங்கிருந்தாலும் அம்பாளின் திருவடியே நினைந்துருவுவார்கள் என்பது மட்டும் உண்மை.
அம்பாளின் ஆலயம் இராஜ கோபுரங்களுடன் பிரமாண்டமாக கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் எமது இளம் சந்ததி ஆலய அங்கத்தவர்களாக மட்டுமின்றி ஆலய நிர்வாகத்திலும் உள்வாங்கப்பட வேண்டும். புதிய சிந்தனையும் பரந்த மனப்பான்மையும் இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். சினம் கொண்டு தீங்கிழைக்கும் தீயர்களையும் குறுகிய எண்ணங் கொண்டோரையும் நிச்சயம் அம்பாள் நல்வழி காட்டி தன் பணி தொடர அனைவரையும் வாரி அணைப்பாள் என்பதே உண்மையாகும்.
காலக் கிழவி நல்லதும் செய்வாள். கெட்டதும் செய்வாள்.
இறுதியாக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ வசைபாடல்களுக்கும் வக்கனைப் பேச்சுக்களுக்கும் ஆளாகியும் தளராது பணியாற்றிய ஆலய அறங்காவலர் சபையினருக்கும் அவர்களுக்கு ஒத்துழைப்பு ஒத்தாசை வழங்கிய அம்பாள் கருணை பெற்ற அன்பு உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நாகம் மீதமர்ந்த நாகபூசணியே அனைவர்க்கும் நல்லருள் வழங்கு தாயே! ஓம் சக்தி
T.K..பரமேஸ்வரன் - ஈழநாடு























