ஷேக் ஹசீனா குற்றவாளி என்றால் முகமது யூனுஸ் யார்? - கேலிக்கூத்து என வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா காட்டம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாணவர் இயக்கத்தின் போது போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டது போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் திங்கள்கிழமை ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தஸ்லிமா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், "நாசவேலையில் ஈடுபட்டவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனாவை குற்றவாளி என அறிவிக்கும் யூனுஸ் அரசு, அதே செயல்களைச் தாங்கள் செய்யும்போது அவற்றை நீதியானவை என்று அழைக்கிறார்கள்.
யாராவது நாவேலைச் செயல்களைச் செய்தால் தற்போதைய அரசாங்கம் அவர்களைச் சுட உத்தரவிடும்போது, அரசாங்கம் தன்னை ஒரு குற்றவாளி என்று கூறுவதில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசவேலைச் செயல்களைச் செய்தவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனா ஏன் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்?
ஜூலை மாதம் நாசவேலைச் செய்த பயங்கரவாதிகள், மெட்ரோவுக்கு தீ வைத்தவர்கள், மக்களைக் கொன்றவர்கள், காவல்துறை அதிகாரிகளைக் கொன்றவர்கள் ஏன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை?வங்கதேசத்தில் நீதியின் பெயரால் நடக்கும் கேலிக்கூத்து எப்போது முடிவுக்கு வரும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மாணவர் போராட்டங்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வங்க தேசம் அழுத்தம் கொடுத்து வருகிறது. தனது மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்று ஹசீனா குற்றம் சாட்டினார்.
அதேநேரம், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று முகமது யூனுஸ் கருத்து தெரிவித்தார்.
அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக வந்த இந்தத் தீர்ப்பு, வங்கதேச அரசியலில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
முகமது யூனுஸ் ஆட்சியில் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினராக இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் யூனுஸ் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.






















