வியட்நாம் நிலச்சரிவில் பேருந்து மேல் உருண்டு விழுந்த பாறைகள் - 6 பேர் பலி - பலர் படுகாயம்
வியட்நாமில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து மீது பாறைகள் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
வியட்நாமின் பொருளாதார தலைநகரான ஹோ சி மின் நகரத்திலிருந்து 32 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணியளவில் கான் லே மாகாணத்தில் கணவாய் ஒன்றில் இடையே பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்தின் மேல் பாறைகள் விழுந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியது.
பல பயணிகள் பேருந்தில் சிக்கிக் கொண்ட நிலையில் கனமழையால் கணவாய் இருபுறமும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டதால், மீட்புப் படையினரால் பல மணி நேரம் சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.
நள்ளிரவுக்குப் பிறகுதான் மீட்புப் படையினர் பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் உடல்களும் மீட்கப்பட்டன.
கான் லே மாகாணத்தில் பல மலைப்பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






















