கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு - மேலும் ஒருவர் கைது
இலங்கை
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியதாக மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு நடத்திய விசாரணைகளில், சந்தேக நபர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் குற்றவாளியுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர் துப்பாக்கிச் சூட்டை எளிதாக்குவதற்காக குற்றவாளிகளுக்கு வாகனம் ஒன்றை வழங்கியிருந்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் பயண வழி குறித்த தகவல்களை அவர்களுக்கு வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு 13, பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
பொலிஸாரின் கூற்றுப்படி, நவம்பர் 07 ஆம் திகதிக கொட்டாஞ்சேனை 16 ஆவது வீதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
அப்போது, காரில் வந்த ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 43 வயது நபர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நபர், பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் பாலச்சந்திரன் புஷ்பராஜின் நண்பர் என்றும், அவர் “புகுடு கண்ணா” என்றும் அழைக்கப்படுகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.





















