18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் TIN எண் கட்டாயமா - இறைவரித் திணைக்களம் விளக்கம்
இலங்கை
இலங்கையில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 4 மில்லியன் மக்கள் இன்னும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறவில்லை என இறைவரித் திணைக்களத்தின் கொள்கை, சட்டவாக்க ஆணையாளர் மற்றும் அதிகாரப்பூர்வ ஊடகப் பேச்சாளர் நந்தன குமார தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இலங்கையில் சுமார் 17 மில்லியன் வயது வந்தவர்கள் உள்ள நிலையில், அவர்களில் 13 மில்லியன் பேர் ஏற்கனவே வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சட்டத்தின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் இந்த அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்றும், முன்னதாக, சில குறிப்பிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெறுவது குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்குவதற்காக, இந்த எண்ணைப் பெறுவதால் மட்டுமே ஒருவர் தானாகவே வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படாது என்றும் இதன்போது நந்தன குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
பதிவு செய்யும் செயல்முறை குறித்த தவறான புரிதல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதாகவும், சிலரிடம் அந்த அச்சம் இன்னும் நீடிப்பதாகவும் அறியமுடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வரி முறையைச் சீரமைக்கவும் மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டே, வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறுவதற்கான சட்டப்பூர்வ தேவை அறிமுகப்படுத்தப்பட்டதாக நந்தன குமார வலியுறுத்தியுள்ளார்.
வயது வந்த அனைவரும் இந்த அடையாள எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், வரி செலுத்துவதற்கான தகுதிகளைக் கொண்ட நபர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.






















