• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பங்களாதேஷில் பொருளாதார நெருக்கடி - அன்றாட வாழ்க்கைக்குக் கடன் வாங்கும் அவலம்

மனித மேம்பாடு மற்றும் கிராமிய வாழ்வாதாரத்தை உயர்த்தியதன் மூலம் வறுமையை ஒழித்து உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த பங்களாதேஷ், தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்க அளவில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி பதிவாகிய போதிலும், நாட்டின் மக்களின் அன்றாட அத்தியாவசிய நுகர்வுச் சேவைகளைக் கூடப் பெற முடியாத அளவிற்கு மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து வருகின்றது.

பங்களாதேஷ் புள்ளிவிவரப் பணியகத்தால் (Bangladesh Bureau of Statistics) 2026 ஒக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு அறிக்கையின்படி, அந்த நாட்டின் மொத்தக் குடும்பங்களில் 47.42% குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்வதற்குக் கடன் வாங்குகின்றன.

அந்த நாட்டில் ஒரு குடும்பத்தின் சராசரி மாதாந்த வருமானம் 33,513 டாக்கா (Taka) ஆக உள்ள நிலையில், சராசரி மாதாந்த செலவு 35,311 டாக்காவாக உயர்ந்துள்ளது.

கிராமப்புறப் பகுதிகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும், அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடன் வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 51.91% ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஈட்டும் வருமானத்திலிருந்து கடன் தவணைகளைச் செலுத்த வேண்டியுள்ளதால், உணவு, சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு ஒதுக் கப்படும் பணம் மேலும் குறைந்துள்ளது.

உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு மேல் இருந்தபோதிலும், திடீர் நோய், வேலை இழப்பு, விலைவாசி உயர்வு அல்லது காலநிலை மாற்றம் போன்ற சிறிய பொருளாதார அதிர்ச்சியைக் கூடத் தாங்கும் நிதி வலிமையற்ற 'புதிய ஏழைச் சமூகம்' பங்களாதேஷிலும் உருவாகி வருகின்றது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி அல்லது ஏற்றுமதி விரிவாக்கம் மட்டுமே ஒரு பொருளாதாரத்தின் வெற்றியைக் அளவிடப் போதுமானதாகாது என்றும், அந்த வளர்ச்சியின் பலன்கள் கீழ்மட்ட மக்களுக்குச் சரியாகச் சென்றடையாவிட்டால் இத்தகைய பொருளாதார முன்னேற்றம் எந்தக் கணத்திலும் சரிவடையும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 

Leave a Reply