பிரித்தானியாவிலிருந்து சுதந்திரம் பெற விரும்பும் கிராமம் - உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ள விடயம்
Home secretary says she wants to distinguish between far-right extremism and legitimate local concerns over asylum sites: பிரித்தானியாவிலிருந்து கிராமம் ஒன்று சுதந்திரம் பெற விரும்பும் விடயம் தொடர்பில் ஒரு சம்பவம் உள்துறைச் செயலரை கொந்தளிக்கவைத்துள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷையரிலுள்ள கிராமம், பிடிங்டன். 350 பேர் மட்டுமே வாழும் அச்சிறு கிராமத்தில் ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை தங்க வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அக்கிராம மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஆகவே, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரித்தானியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே பிடிங்டன் கிராம மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கோபத்திலிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்தில், இங்கிலாந்திலுள்ள டோவர் மற்றும் போர்ட்ஸ்மௌத் ஆகிய இடங்களில் முகமூடி அணிந்த ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.
அந்தக் கூட்டத்தினர், Patriot Platform என்னும் புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
அந்த அமைப்பின் தலைவர், டேனியல் தாமஸ். டேனி டாமோ என அழைக்கப்படும் இந்த தாமஸ், ஒரு கடத்தல் வழக்கு தொடர்பில் சிறை சென்றவர் ஆவார்.
அவர்தான், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அமைப்பான Patriot Platform என்னும் அமைப்பை உருவாக்கி புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்.
இந்த டேனியல் தாமஸ், சமீபத்தில் பிடிங்டன் கிராமத்துக்குச் சென்று அக்கிராம நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
அவர் ஆயிரக்கணக்கான தனது குழுவினருடன் பிடிங்டன் கிராமத்துக்குச் சென்று அக்கிராமத்துக்குள் புகலிடக்கோரிக்கையாளர்கள் நுழையாமல் தடுக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம்தான் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதை கொந்தளிக்கச் செய்துள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்று தங்கள் கிராமத்தில் அமைக்கப்பட இருப்பது தொடர்பில் பிடிங்டன் கிராம மக்களின் நியாயமான கவலைகளுக்கும், பயங்கரவாத எண்ணம் கொண்டவர்கள் அதை பயன்படுத்திக்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை தான் காட்டவிரும்புவதாக தெரிவித்துள்ளார் ஷபானா.
அவ்வகையில், தீவிர வலதுசாரி இனவெறுப்பாளர்களான டேனியல் தாமஸ் போன்றவர்கள் சமுதாயத்தில் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையில் பிடிங்டன் கிராம பிரச்சினையை எடுப்பது என்னும் விடயம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்றும், அவர்கள் சட்டத்தை மீறும் நிலையில், அவர்கள் மீது சட்டம் முழுவீச்சில் பாயும் என்றும் கூறியுள்ளார் ஷபானா.























