காரில் செல்லப்பிராணியைப் பூட்டி வைத்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு
கனடாவில், காரில் செல்லப்பிராணியான நாயை பூட்டி வைத்த உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கோடைகாலம் இன்னும் முடியாத நிலையில், "உங்களுக்கு அதிக வெப்பமாகத் தோன்றும் வாகனம், உங்கள் செல்லப்பிராணிக்கும் ஆபத்தானது" எனச் சவுத் சிம்கோ காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் 1 மணியளவில், கனடாவின் குக்ஸ்டவுனில் உள்ள டாங்கர் அவுட்லெட் மாலில் நாய் ஒன்று காரில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், காரின் பின்புறப் பகுதியில் உள்ள கூண்டில் நாய் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
அந்த நாய்க்குக் குடிப்பதற்குத் தண்ணீரும் வைக்கப்படவில்லை. வாகனத்தின் எஞ்சின் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது, காரின் முன்பக்கக் கண்ணாடி சுமார் ஒரு அங்குலம் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது, அப்போது வெளிப்புற வெப்பநிலை சுமார் 23 பாகை செல்சியஸாக இருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
காரின் உரிமையாளரைத் தேடும் முயற்சியில் இறங்கிய அதிகாரிகள், மாலில் பொது அறிவிப்பும் செய்தனர். தேடுதல் வேட்டையின் போது உரிமையாளர் வாகனத்திற்குத் திரும்பி வந்தார்.
அதற்குள் அந்த நாய் 30 நிமிடங்களுக்கும் மேலாகக் காரிலேயே அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மாகாண விலங்குகள் நலச் சேவை சட்டத்தின் கீழ் காரின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் காவல் துறை வெளியிட்ட வீடியோவில், அதிகாரி ஒருவர் உரிமையாளரிடம் பேசுகையில், "ஒரு சூடான காரில் அரை மணி நேரம் என்னால் அமர முடியாது என்றால், எனது செல்லப்பிராணியையும் அங்கு வைக்க அனுமதிக்க மாட்டேன்" என்று கூறுவது பதிவாகியுள்ளது.
மேலும், இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து அதிக அளவில் வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பொருட்கள் வாங்கச் செல்லும்போதோ அல்லது வெளிப்புற வேலைகளுக்குச் செல்லும்போதோ செல்லப்பிராணிகளைக் காரில் விட்டுச் செல்லாமல், பாதுகாப்பாக வீட்டில் விட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





















