உக்ரைன் ட்ரோன் தாக்குதல் எதிரொலி - இந்தியாவிடம் இருந்து எரிபொருள் வாங்கும் ரஷியா
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் இருந்து 1.72 லட்சம் டன் வரை சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) தெரிவித்துள்ளது.
இதில், ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட 1.20 லட்சம் டன் பெற்றோல் அடங்கும். இதன் மதிப்பு சுமார் 7.8 கோடி யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதி முந்தைய மாதத்தைவிட 7 மடங்கும், 2025ஆம் ஆண்டு முழுவதும் இறக்குமதி செய்த அளவைவிட 3 மடங்கும் அதிகரித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களால் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி குறைந்ததே இந்த இறக்குமதி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் கடல் வழி எண்ணெய் ஏற்றுமதி 21% குறைந்ததுடன், நோவோரொஸிஸ்க் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 58% குறைந்துள்ளது.
துவாப்சே துறைமுகத்திலும் மூன்று மாதங்களாக எண்ணெய் ஏற்றுமதி நடைபெறவில்லை.
எனினும், உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்ததால் ரஷ்யாவுக்கு ஓரளவு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்டில் ரஷியாவின் யூரல்ஸ் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பீப்பாய்க்கு 69.90 அமெரிக்க டாலராக உயர்ந்தது.





















