• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த மாணவி கடத்தல் - பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

இலங்கை

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இளம் பெண்ணை அவரது காதலனே கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அம்மாணவியை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மாத்தறை, வெலிகம மற்றும் மிடிகம பகுதிகளைச் சேர்ந்த இவர்களில், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அம்மாணவி தனது குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தார். தன் காதலனுக்குத் தெரிவிக்காமல் விழாவிற்கு வந்ததால் ஆத்திரமடைந்த காதலன், அவரைப் பலவந்தமாகக் காரில் கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கிடைத்த தகவலையடுத்து, நாரஹேன்பிட்டவிலிருந்து நாவலை நோக்கிச் சென்ற சந்தேகத்திற்குரிய காரைப் பொலிஸார் நிறுத்த முற்பட்டனர். பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்றதால், நாவல வீதியில் வைத்து பொலிஸார் காரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது காரைக் கைவிட்டுவிட்டு ஓட்டுநரான காதலன் தப்பி ஓடிய நிலையில், காரிலிருந்த மாணவி மீட்கப்பட்டார்.

விசாரணையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மாணவியின் காதலனுக்குச் சொந்தமானது என்பதும், அதனைப் பட்டமளிப்பு விழாவிற்கு மாணவியின் தந்தையே ஓட்டி வந்திருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தப்பி ஓடிய காதலன் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையில் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

மீட்கப்பட்ட மாணவி கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். தப்பி ஓடிய சந்தேகநபரைக் கைது செய்யக் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா மற்றும் கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் லூசியன் சூரியபண்டார ஆகியோரின் மேற்பார்வையில் குருந்தவத்தை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply