லேக் ஒன்றாரியோ புதிய பெயர் பலகையை திறந்து வைத்து டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த கனடா
கனடா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் புகழ்பெற்ற 'லேக் ஒன்ராறியோ' ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றியதற்கு கனடா அரசு மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசு ஆகியவை மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளன.
டிரம்பிற்கு பதிலடி வழங்கும் நோக்கில் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் புதிய 'லேக் ஒன்ராறியோ' பெயர்ப்பலகையைத் திறந்து வைத்துள்ளார்.
அதிபர் டிரம்ப் இதை என்ன பெயர் வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் உலகம் முழுவதும் இதனை எப்போதும் 'லேக் ஒன்ராறியோ' என்றுதான் அழைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கனடா தனது இறையாண்மையை எப்போதும் பாதுகாக்கும். மிரட்டல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பணியமாட்டோம் என டிரம்பிற்கு நேரடியாகவே பதிலடி கொடுத்துள்ளார்.
கனேடிய பிரதமர் மார்க் கார்னி, டிரம்பின் இந்த அறிவிப்பை முற்றாக நிராகரித்துள்ளார். 'ஒன்ராறியோ' என்ற பெயர் 'வெண்டாட்' பழங்குடியின மொழியிலிருந்து வந்த 'ஒன்டாரியோ' (Ontari'io - அதாவது 'அழகான, பெரிய ஏரி') என்ற சொல்லாகும். இது கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு முன்பே, 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வரலாற்றுப் பெயர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வரைபடங்கள் மற்றும் தரவுத்தளங்களில் இந்த ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றுமாறு டிரம்ப் நிறைவேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக 'மெக்சிகோ வளைகுடா'வை 'கல்ஃப் ஆஃப் அமெரிக்கா' என மாற்ற முயன்றதன் தொடர்ச்சியாகவே இச்செயல் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் குறித்துப் பேசிய டக் ஃபோர்ட், கனடிய தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் மோசமான ஒப்பந்தத்தை விட ஒப்பந்தமே இல்லாமல் இருப்பது மேல் எனக் குறிப்பிட்டதுடன், உருக்கு மற்றும் வாகன உற்பத்தித் துறைகளைப் பாதுகாக்க கனடா அனைத்து முடிவுகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.






















