நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது - கொலம்பியாவில் அவசரநிலை பிரகடனம்
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 111-ஆக உயர்ந்துள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, கொலம்பியா அவசரநிலையை அறிவித்தது.
மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
"உயிர்களை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவவும், தேவைப்படும் ஒவ்வொரு பகுதிக்கும் நிவாரண உதவிகளை வழங்கவும் அரசாங்கம் தனது அனைத்து திறன்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது," என்று ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா பொகோட்டாவில் இருந்து தெரிவித்தார்.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 111 பேர் உயிரிழந்ததாகவும், 87 பேர் காயமடைந்ததாகவும், 1,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, கொலம்பியாவின் கடலோர சோகோ பிராந்தியத்தில் 100 கிலோமீட்டர் (60 மைல்) ஆழத்தில் அமைந்திருந்தது. வறுமை நிறைந்த அந்தப் பகுதியில் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருகிலுள்ள பெரேரா நகரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். அந்நகரம் மாகாணத் தலைநகராக உள்ள ரிசரால்டா பிராந்தியத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் முன்னதாக அறிவித்திருந்தனர். மனிசாலெஸ் நகரில் உள்ள மிகவும் விரும்பப்படும் பேராலயத்தின் கோபுரம் நிலநடுக்கத்தால் நொறுங்கியதாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் கவனித்தார்.
கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரமான காலியில் குறைந்தது 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர் என்று மேயர் அலெஜான்ட்ரோ எடர் கூறினார்.
"நாங்கள் அனைவரும் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். தற்போதைய நிலையில், உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர், ஆனால் காணாமல் போனவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்," என குயிப்டோ சமூகத் தலைவர் லூயிஸ் கிரிகோரியோ மோரேனோ ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.






















