• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா செய்த முதல்மரியாதை..

சினிமா

'முதல்மரியாதை' ரீரெக்கார்டிங்குக்காக தயாராகிறது. காலையில் தொடங்கும் ரெக்கார்டிங் இரவு 8 வரை நடக்கும்.
முதல் ரீலை பார்த்த இளையராஜா அப்செட்..பாரதிராஜாவைப்பார்த்து "என்னய்யா...ரொம்ப இழுக்குதே.." எனக்கமெண்ட் அடித்தார். பின் இரண்டாவது,  மூன்றாவது ரீல் பின்னணி இசை நடக்கிறது. இடைவெளியில் டீ குடிக்க, தம்மடிக்கப் போகும் வாசிப்பாளர்கள் யாரும் போகவில்லை. படம் ரெக்கார்டிங்கிலேயே அவர்களை கட்டிப்போடுகிறது.
கடைசி கிளைமேக்ஸ் வரும்போது பாராதிராஜாவுக்கு எம்ஜிஆரிடமிருந்து அழைப்பு வருகிறது. "நீ முடித்து விட்டு போய்யா" என ராஜாவிடம் அசிஸ்டண்ட்டை விட்டு விட்டு போகிறார் பாரதிராஜா.
எட்டுமணிக்கு ராஜா வீட்டுக்கு போயிருப்பார் என ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்த பாரதிராஜா ராஜா அங்கே போகாமல் உட்கார்ந்திருப்பதைப்பார்க்கிறார். 
"என்னடா போகலையா?"
"ஆமா...நான் போனதுக்கப்புறம் நீ ஏதாவது குறை சொல்லுவே. நீ பார்த்துட்டு சொல்லு..."
க்ளைமேக்ஸ் திரையில் ஓடுகிறது. சிவாஜி ராதாவிடம் முடியில் கோர்த்த மாலையைக்கொடுத்ததும் உடைந்தெடுத்த வெள்ளம் ராஜா பெண்களின் ஹம்மிங்கை போட்டிருந்தார். பாரதிராஜா ஸ்தம்பித்து உட்கார்ந்திருக்கிறார். படமே முடிந்து விட்டது. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பாரதிராஜா அசையவில்லை.
"எப்படிய்யா இருக்கு...?"

"போடா...." இந்த வார்த்தை மட்டுமே அவரிடமிருந்து வருகிறது. அந்த போடாவுக்குள் ஆயிரமாயிரம் பாராட்டுகள், நன்றிகள், அருமைகள், நெகிழ்வுகள்...
படத்தை யாருமே வாங்கவில்லை. பாரதிராஜாவே சொந்தமாக ரிலீஸ் செய்கிறார். இரண்டு நாள் பேச்சு மூச்சில்லை. மூன்றாம் நாளிலிருந்து படம் பிய்த்துக்கொண்டு போகிறது. 
டேபிள் முழுக்க பணம். ராஜாவுக்கு தரவேண்டிய இரண்டு லட்சத்தில் ஒரு லட்சத்தை எடுத்துக்கொண்டு ராஜாவை சந்திக்கிறார் பாரதிராஜா.
"என்னய்யா படம் நல்லா போகுதாமே.." என சிரித்த முகத்தோடு கேட்கிறார் ராஜா.
"ஆமாயா...இந்த உன்னோட பணம்..."
ராஜா ஒரு  கணம் பாரதிராஜாவை பார்த்து விட்டுச்சொல்கிறார்.
"உன் படத்தின் முதல் ரீலுக்கு எழுத பேனா எடுத்த போதே முடிவு செய்துவிட்டேன். இந்தப்படத்துக்கு பணம் வாங்காமல் உனக்கு உதவ வேண்டுமென. முடிவில் மாற்றமில்லை"..
கடைசியாக பாரதிராஜா இறக்கும் வரை ராஜா பணம் வாங்கவில்லை என்பது தான் ராஜா நல்ல படைப்புக்கும், நண்பனுக்கும் செய்த 'முதல் மரியாதை'. 

Selvan Anbu

Leave a Reply