• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொரோக்கோ–ஸ்பெயின் எல்லையில் பதற்றம் - சியூட்டா மீண்டும் உலக கவனத்தில்

மொரோக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் தன்னாட்சி நகரமான சியூட்டா (Ceuta) பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள குடியேற்ற நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்திருந்தாலும், சியூட்டா ஸ்பெயினின் தன்னாட்சி நகரமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நகரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற எல்லையாகவும் கருதப்படுகிறது.

வரலாற்றுப் பதிவுகளின்படி, 1415 ஆம் ஆண்டு போர்த்துக்கல் சியூட்டாவைக் கைப்பற்றியது.

பின்னர் 1668 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட லிஸ்பன் உடன்படிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதி ஸ்பெயினின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

அதன்பின்னர் சியூட்டா தொடர்ந்து ஸ்பெயினின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகிறது. இருப்பினும், மொரோக்கோ அரசு சியூட்டாவையும் மெலில்லா (Melilla) நகரையும் தமது இறையாண்மைக்குட்பட்ட பகுதிகளாக தொடர்ந்து உரிமைகோரி வருகிறது.

ஆனால், அந்தக் கோரிக்கையை ஸ்பெயின் நிராகரித்து வருகிறது. அண்மையில், ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் சியூட்டாவை நோக்கி எல்லையைக் கடக்க முயன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் மொரோக்கோ நாட்டவர்களுடன், ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளும் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையால் எல்லைப் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் மீது கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு மேற்கொண்டுள்ளது.

சியூட்டா விவகாரம் குடியேற்றப் பிரச்சினையை மட்டுமன்றி, வரலாறு, இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான விடயமாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, சியூட்டா தொடர்பான தமது உரிமைக் கோரிக்கையை மொரோக்கோ தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பகுதி ஸ்பெயினின் பிரிக்க முடியாத தன்னாட்சி நகரம் என்ற தனது நிலைப்பாட்டை ஸ்பெயின் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
 

Leave a Reply