அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் - அதிரடி கொடுக்கும் அமெரிக்கப் படைகள்
ஜோர்தானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.
சவூதி அரேபியாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது கடந்த சில நாள்களாக ஈராக்கிலிருந்து 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜோர்தானில் உள்ள விமானப் படைத் தளம் மற்றும் அங்குள்ள அமெரிக்க மத்திய படைப்பிரிவின் தலைமையகத்தைக் குறிவைத்து ஈரான் பல ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் 5 ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து, ஜோர்தான் ராணுவம் சுட்டுவீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் தெற்குப் பகுதியைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல்களைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவில் மூன்று முறை வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், அங்கு குடியிருப்பு பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இந்தத் தாக்குதல் சேதம் மற்றும் உயிர்ப்பலிகள் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.






















