களுவாஞ்சிகுடி கோவிலில் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு
இலங்கை
களுவாஞ்சிகுடியில் வைத்து திருடப்பட்ட ரூ. 8,90,000-க்கும் அதிக மதிப்புடைய மோட்டார் சைக்கிள், பாணமை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாகக் களுவாஞ்சிகுடி பொலிஸார் இன்று புதன்கிழமை (29) தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த 2026 ஜூலை 22 ஆம் திகதி களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் வைத்து காணாமல் போயிருந்தது.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல்களைப் பரிமாறித் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர்.
சூட்சுமமான முறையில் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற சந்தேகநபர், அதன் இலக்கத் தகட்டை மாற்றியமைத்து கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், பாணமை பொலிஸாருடன் இணைந்து நேற்றைய தினம் ( 28) மேற்கொள்ளப்பட்ட சுற்றுக் காவலில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 25 வயது மதிக்கத்தக்கவர் எனவும், அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் போலி இலக்கத் தகடு என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தீப்த்திகுமாரவின் வழிநடத்தலில், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபாஸ் ஆரியரெத்னவின் வழிகாட்டுதலின் கீழ், பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜே.பி.ஜோய் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது அவற்றைச் சரியான முறையில் பூட்டி பாதுகாப்பாக நிறுத்துமாறும், திருடர்கள் நடமாட்டம் குறித்து விழிப்புடன் செயற்படுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





















