அவருடன் பிறந்ததே பெருமை! - இளையராஜா பற்றி தம்பி கங்கை அமரன் உருக்கம்
சினிமா
இசைஞானி இளையராஜா இசையமைத்து எழுதிய "பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்" ஆல்பத்தை, பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பாடியுள்ளார். இந்த ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “நான் 1980-களில் திருவண்ணாமலையில் மலை சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தேன். அங்கு நான் தனியாக அமர்ந்திருக்கும் போது மாணிக்கவாசகர் பாடிய பாடலை நினைத்து பார்ப்பேன்.
திருவண்ணாமலையில் இருந்து இங்கு வந்து 3 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் வீட்டில் எழுந்து உட்கார்ந்த போது தான், ’பாடிக்கிடைத்த பரம்பொருளே’ என்ற பாடல் எனக்குள் வந்தது. இந்த பாடல் நான் எழுதிய தமிழா என எனக்கே தோன்றியது. அது இறைவன் கொடுத்தது. இசை என்பதே தெய்வீக கலை” என்றார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட, இளையராஜாவின் சகோதரரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியரான கங்கை அமரன், தனது சகோதரர் குறித்த பல நெகிழ்ச்சி தகவல்களை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில்,ரசிகர்களாகிய நீங்கள் அவரை பார்த்து எப்படி வியந்தீர்களோ, அதேபோல்தான் நானும் அவருடன் இருப்பதால் இன்னும் பெருமையாக உணர்கிறேன்.
தன்னுடைய இசை வெளிப்பாட்டை இவ்வாறு பக்தி வழியில் கொண்டுவந்து அனைவரும் பாடும் நிலைக்கு உயர்த்தியுள்ளார். தூய்மையான தமிழில், தமிழ் இசையால், எதிர்காலத் தலைமுறையினருக்கு இந்தப் பாடல்கள் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உருவாக்கியிருப்பது மிகப்பெரிய விஷயமாகும்.
எனக்கு அவர் அண்ணனாக, நான் அவருக்குத் தம்பியாக இருந்தபோதிலும், அருகில் இருந்து பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. 'இவருடனா நாம் பிறந்திருக்கிறோம்?' என்று வியக்கும் அளவுக்கு எண்ணத்திலும் இசையிலும் உயர்ந்து நிற்கிறார். அவரைப் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. வணங்கிக்கொண்டேதான் இருக்க வேண்டும். அவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இது போன்ற ஒரு படைப்பு பிரமிக்க வைக்கிறது என்றார்.
மேலும், அவருக்கு இசை என்பது பிறவியிலேயே அமைந்தது. சாதாரணமாகப் பேசும்போது பாடச் சொன்னால் கூடப் புதிய பாடலைப் பாடுவார். புதிய வரிகளைக் கூறினால் உடனே மெட்டமைப்பார். அப்படிப்பட்ட ஒரு அரிதான மாணிக்கம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அவ்வளவுதான் நான் உணர்ந்தது.
ஏனெனில், செவ்வியல் இசை எதிர்காலத்திற்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் இதைச் செய்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளையில், சொற்களின் பொருள் மாறாமல், அந்த காலத்தில் எவ்வாறு இருந்ததோ அதே சொற்றொடர்களையே அவர் பயன்படுத்தியிருப்பது பெரிய விஷயம்.
அதை ஆழமாக உணர்ந்து பார்த்தால்தான் தெரியும். பலர் திருப்புகழ் பாடுகிறார்கள். அந்த மரபிலும் பண்பாட்டிலும் இருந்து விலகாமல் கொண்டு செல்வதற்கான வழியை அவர் அமைத்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
திருவண்ணாமலைக்கும் அவருக்குமான பிணைப்பு பற்றிப் பலமுறை பேசியிருக்கிறார். இது போன்ற விஷயங்கள் குறித்து எதுவும் கூற மாட்டார். அவருக்குள் இன்னும் என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. காட்டிக்கொள்ளவும் மாட்டார். படைப்பாக வெளியே வரும்போதுதான் தெரியவரும். எழுதி முடித்ததும் படித்துக் காட்டுவார், அப்போது நாங்களும் படித்து ரசிப்போம். இலக்கணத் தூய்மையோடு இருப்பதால் படிப்பதற்குச் சற்று கடினமாக இருக்கும்.
பின்னர் அதைச் சீர்பிரித்துப் பாடிக் காட்டும்போது நமக்கு எளிதாகப் புரியும். முன்னோர்கள் எழுதிய இலக்கியங்கள் அனைத்துமே அப்படித்தானே இருக்கும். அந்தச் சொற்றொடர்களை எந்த இடத்தில் பிரித்துப் பார்த்தால் பொருள் விளங்குமோ, அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.
அதுபோல உயர்ந்த தன்மையில், பழங்கால நயத்தோடு இலக்கணப் பிழையின்றிப் பாடல்களை எழுதியுள்ளார். அதற்கு ஏற்றார்போல் இசையமைத்தும் இருக்கிறார். பிற்கால இளைஞர்களும் ரசிக்கும் வகையில் பின்னணி இசையையும் அவரே அமைத்துள்ளார். இதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
நீங்கள் என்ன உணர்ந்தீர்களோ, அதேபோல்தான் நானும் ஒரு ரசிகனாகவே இங்கு வந்திருக்கிறேன். நான் தம்பியாக யோசிக்கவே இல்லை; 'ஐயோ, எங்கள் அண்ணனா இவர்!' என்று பெருமிதம் கொள்ளும் வகையில் இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.























