தெற்காசிய கராத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெசலிக்கு வரவேற்பு
இலங்கை
பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 10ஆவது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 68 கிலோகிராம் குமித்தே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கும் கினிகத்தேனை பிரதேசத்திற்கும்இ தாம் கல்வி பயிலும் கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயத்திற்கும் சர்வதேச பெருமையைப் பெற்றுத் தந்த ஹெசலி பிமன்யா பண்டாரவுக்கு நேற்று கினிகத்தேனை மக்கள் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கினிகத்தேனை நகரை வந்தடைந்த அவரை பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றதையடுத்து விசேட வாகன அணிவகுப்பின் மூலம் நகரைச் சுற்றி அழைத்துச் செல்லப்பட்டது.
பின்னர் கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை ஹட்டன் கல்வி வலயப் பணிப்பாளர் எம். சுமதிஇ கல்வி வலய அலுவலக அதிகாரிகள்இ கினிகத்தேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விராஜ் விதானகே, பாடசாலை அதிபர் எச். எச். மங்களிகா ஹேரத், பிரதியதிபர்கள், முன்னாள் அதிபர் உபுல் இந்திரஜித், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த அவரது சாதனையைப் பாராட்டும் வகையில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






















