மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறை அதிகரிப்பு - ஐநா
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் கடந்த ஜூலை 24ஆம் தேதி நப்லஸ் நகருக்கு அருகே பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தாக்குதல் நடத்தினர்.
கிராம மக்கள் எதிர்த்துப் போராடியபோது குடியேற்றவாசிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாலஸ்தீனர்கள் திருப்பித் தாக்கிய நிலையில், இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து நடத்திய தாக்குதலில் 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். மோதலில் 2 இஸ்ரேல் வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பழிவாங்க, நேற்றுமுன் தினம் அதிகாலைஇஸ்ரேலியர்கள் ஆயுதங்களுடன் பாலஸ்தீன கிராமங்களுக்குள் புகுந்தனர்.
அங்கு வெறித்தனமாக தாக்குதல் நடத்திய அவர்கள், குஸ்ரா மற்றும் கூர் ஆகிய கிராமங்களில் உள்ள 2 மசூதிகளுக்கு தீ வைத்தனர். அங்கிருந்த பாலஸ்தீனியர்களின் கார்கள் மற்றும் விவசாய நிலங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய குடியேறிகள் நடத்தும் வன்முறை தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளை விட நடப்பாண்டில் வன்முறை தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதற்கான தரவுகளை ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ளது.
2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், இஸ்ரேலிய குடியேறிகள் 1,000க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனால் உயிரிழப்புகளும், உடைமைகளுக்குக் கடுமையான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த வன்முறைகளால் மேற்குக் கரை முழுவதும் உள்ள 230க்கும் மேற்பட்ட பாலஸ்தீன சமூகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குடியேறிகளின் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக நடப்பாண்டில் மட்டும் 2,200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயரும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் 4 பாலஸ்தீனர்களும், 2 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நேதன்யாகு, மேற்கு கரை முழுவதும் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
மேற்குக் கரைப் பகுதிகளில் கூடுதல் இஸ்ரேலியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுப் பல பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பல புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
2023இல் காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மேற்கு கரையில் 1,182 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 13,000 பேர் காயமடைந்துள்ளனர்.
24,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கைது செய்து சிறையிலடைத்துள்ளது என பாலஸ்தீன அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.






















