• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென்னாபிரிக்காவில் அதிகரிக்கும் கறுப்பினத்தவருக்கு எதிரான உணர்வு

ஆபிரிக்கக் கண்டத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளுள் ஒன்றாக தென்னாபிரிக்கா விளங்குகிறது. நடப்பு வருடத்தில் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள பொருளாதார அடிப்படையில் அதிகம் வளர்ச்சியடைந்த நாடாக அது உள்ளது. அதேபோன்று கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் அதிக வளர்ச்சியடைந்த நாடாகவும், பன்முகத் தன்மை கொண்ட நாடாகவும் உள்ளது. சர்வதேச அடிப்படையில் சக்தி வாய்ந்த ஆபிரிக்க நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஆபிரிக்கக் கண்டத்துக்கான இடம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

1994ஆம் ஆண்டுவரை நிறவெறி ஆட்சி நடைபெற்ற தென்னாபிரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான உணர்வு அண்மைக் காலமாக அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது. அதிலும் ஏனைய ஆபிரிக்க நாடுகளில் இருந்து வேலை தேடிவரும் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான உணர்வு அதிகமாக உள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக கும்பல் வன்முறைகளும் நிகழ்த்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. வெள்ளை நிறத்தவர்கள், இந்தியர்கள், சீனர்கள், அரபுக்கள் உள்ளிட்டோர் மீதான வெறுப்புணர்வை விடவும் கறுப்பினத்தவர்கள் மீதே அதிக வெறுப்பு காண்பிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளையர்களின் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள் மீதான நிறவெறி போன்று ஆபிரிக்கர்கள் மீதான வெறுப்புணர்வு அந்த நாட்டில் நிலவுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முதலாளித்துவ சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இயல்பானவை. அதிலும், வளர்ச்சி கண்டுவரும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஒரு நாட்டில் அதுவே கண்டிப்பான நிபந்தனையாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இலாபம் ஒன்றையே நோக்காகக் கொண்டு செயற்படும் முதலாளித்துவ சமூகத்தில் வேலைவாய்ப்பு இன்மையும் இயல்பானதே. தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து இலாபம் பார்க்கும் முதலாளித்துவ மனோபாவத்துக்கு, குறைந்த வேதனத்தில் கிடைக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என்றால் கசக்கவா செய்யும்?

பொருளாதார வசந்தத்தை எதிர்பார்த்து நாடு விட்டு நாடு செல்லும் தொழிலாளர்கள் தென்னாபிரிக்காவை நோக்கிப் படையெடுக்க, வேலை வாய்ப்பு இன்றி வாடும் சொந்த நாட்டு மக்கள் அவர்களை எதிரியாகப் பார்க்க, சுயநலன் மிக்க ஒரு சில அரசியல் இயக்கங்கள் அவர்களைத் தூண்டிவிட, வெளிநாட்டவர்களுக்கு எதிரான உணர்வு தென்னாபிரிக்காவில் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த எதிர்ப்புணர்வு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்படும் போது, அது வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளாக வெடிக்கிறது. இதனால் பெறுமதியான உயிர்கள் பலி கொள்ளப்படுகின்றன.

வெளிநாட்டவர்களை வெளியேற்றும் கோரிக்கையை ஒருசில தீவிர வலதுசாரி அமைப்புகள் முன்னெடுத்தாலும் அந்தக் கோரிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வெகுவான ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதிலும் வன்முறையைப் பிரயோகித்தாவது அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற அம்சத்தை அவர்கள் பெரிதும் எதிர்த்து நிற்கிறார்கள். ஆனால், ஆளும் கட்சிகள் முதல் எதிர்க் கட்சிகள் வரை வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கொண்டுள்ள நிலையில் வெகுமக்களின் குரல்கள் அமுங்கிப் போகின்றன அல்லது புறக்கணிக்கப்படுகின்றன.

சட்டவிரோதமாக நாட்டில் உள்ள வெளிநாட்டவர்கள் யாவரும் யூன் 30ஆம் திகதிக்கு இடையில் வெளியேற வேண்டும் அல்லது பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என்ற அறைகூவல் வலதுசாரிக் குழுக்களால் விடுக்கப்பட்ட நிலையில், தென்னாபிரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மத்தியில் அச்சநிலை உருவாகி உள்ளது. அயல்நாடுகளின் பல அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களை அழைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் வெளிநாட்டவர்களை வெளியேறக் கோரும் குழுக்களின் நடைமுறைகளை அங்கீகரிக்காது விட்டாலும், வெளிநாட்டவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தும் வகையிலான சட்டங்களையும், நடைமுறைகளையும் அறிமுகம் செய்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. அதே நேரம், வெளிநாட்டவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோருபவர்களின் கோரிக்கைகளில் சில நியாயங்கள் உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றது. தனது இயலாமையை மறைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசாங்கம் பணியிடங்களில் உள்ள சட்டவிரோத தொழிலாளிகள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளதுடன், நாட்டின் எல்லையில் காவல் பணிகளையும் அதிகப்படுத்தி உள்ளது.

தென்னாபிரிக்காவில் நடப்பாண்டில் வேலை வாய்ப்பின்மை 32.7 விழுக்காடாக உள்ளது. இதில் 15 முதல் 24 வயது வரையான இளையோர் மத்தியில் வேலை வாய்ப்பின்மை 60.9 விழுக்காடாக உள்ளது. அதேவேளை, செல்வந்தர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளோரில் 10 வீதமானோரிடம் நாட்டின் 85 விழுக்காடு செல்வம் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டின் எல்லைகளில் நான்கரை இலட்சம் வரையான சட்டவிரோத குடியேறிகள் தடுக்கப்பட்டு உள்ளதாக அரசாங்கப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குடியேறிகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ள அரசாங்கம், பணியிடங்களில் சோதனைகளை மேற்கொண்டு சட்டவிரோத தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பத்தாயிரம் கண்காணிப்பாளர்களை புதிதாக நியமித்துள்ளது. காவல்துறை வழங்கிய தகவல்களின் பிரகாரம் இந்த வருடத்தில் யூலை முதலாம் திகதி வரை 900க்கும் அதிகமான கைதுகள் நாடு முழுவதிலும் இடம்பெற்றுள்ளது. இதில் சற்றொப்ப 300 வரையான பதிவு செய்யப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்களும் உள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் படுகொலைகள் காரணமாக கடந்த மாதத்தில் மாத்திரம் 25,000 வரையான வெளிநாட்டவர்கள் தென்னாபிரிக்காவை விட்டுத் தப்பியோடி உள்ளனர். மேலும் ஆயிரக் கணக்கானோர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பும் நோக்குடன் தூதரக வாசல்களிலும், அரச அலுவலகங்கள் முன்பும், எல்லைக் கடவைகளிலும் காத்திருக்கின்றனர். ஆபிரிக்க நாடுகளான மாலவி, மொஸாம்பிக், சிம்பாப்வே, நைஜீரியா, கென்யா மற்றும் கானா ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்களைத் திருப்பி அழைத்துக் கொள்வதற்காக விசேட பேருந்துகளையும், விமானங்களையும் ஏற்பாடு செய்து தந்துள்ளன.

தென்னாபிரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான அதி மோசமான வன்முறை நிகழ்ந்த வருடமாக 2008ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய வன்முறைகளில் 62 பேர் நாடு முழுவதிலும் கொல்லப்பட்டிருந்தனர். அண்மைய சம்பவங்களில் இதுவரை நான்கு வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. டேர்பன் நகரில் கட்டடமொன்றின் எட்டாவது மாடியில் தங்கியிருந்த போது தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக பலகணி வழியாகக் குதித்த ஒரு வெளிநாட்டவரும் இதில் அடக்கம். இது தவிர, மார்ச் மாதம் முதல் தீவிரம் பெற்றுள்ள வெளிநாட்டவர்களுக்கு எதிரான வன்முறைகளில் மேற்கு கேப் பகுதியில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த தற்காலிக குடியிருப்புகள் தீ மூட்டப்பட்டதில் தங்கள் நாட்டின் குடிமக்கள் ஐவர் கொல்லப்பட்டதாக மொஸாம்பிக் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இனவெறி ஆட்சியால் பாதிக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு அயல் நாடுகள் பெரிதும் உதவின என்பதை உலகம் அறியும், ஆனால் கால ஓட்டத்தில் தமது விடுதலைக்கான உதவிய உறவுகளை எதிரிகளாகக் கருதும் நிலைக்கு தென்னாபிரிக்க மக்களில் ஒரு சாரார் சென்றுள்ளதைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் போக்கினை அரசாங்கம் கைவிட்டு உடனடியாகக் களமிறங்கி தங்கள் சகோதரர்களைக் காப்பாற்ற முன்வரவேண்டும். கட்சியின் பெயரில் மாத்திரம் ஆபிரிக்கத் தேசியம் என்ற சொற்களை வைத்திருப்பதால் பயனில்லை. விரைந்து தீர்க்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையே தொடருமாயின் அது தென்னாபிரிக்க வரலாற்றில் மற்றொரு கறைபடிந்த அத்தியாயமாகவே பதிவு செய்யப்படும்.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a Reply