• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரான்ஸ், ஸ்பெயினை வாட்டும் காட்டுத் தீ.. 2.20 லட்சம் மக்கள் பாதிப்பு 

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸின் Bordeaux பகுதியில் பரவிய காட்டுத்தீயால் இதுவரை 19,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு பாதித்துள்ளது.

தீ பரவலின் வேகம் காரணமாக, பல பகுதிகளில் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான Cap Ferret பகுதி காலி செய்யப்பட்டது.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரின் மேற்குப் பகுதியில் தனித்தனியாக இரு காடுகளில் பற்றிய காட்டுத் தீ பரவி தற்போது ஒன்றிணைந்து எரிந்து வருகிறது. இதனால் அதன் தாக்கம் பல மடங்காக அதிகரித்தது.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் சேர்த்து சுமார் 2.20 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், ராணுவம், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரத்யேக விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய யூனியனின் ஆதரவுடன் கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் அவசரகால உதவிகளை அனுப்பி வைத்துள்ளன.

வீசும் கடுமையான காற்று, வறண்ட நிலப்பரப்பு மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீயை விரைவாகப் பரவச் செய்வதால், தணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

வானிலை முக்கியக் காரணமாகக் கருதப்பட்டாலும், திட்டமிட்டு நாசவேலையில் ஈடுபட தீ வைக்கப்பட்டதா அல்லது மனிதத் தவறுகளால் தீ வைக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. 
 

Leave a Reply