போதைப்பொருள் பணத்தில் வாங்கிய டிராக்டர், 1 கோடி ரூபாய் நிதி முடக்கம்
இலங்கை
இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்வனவு செய்த டிராக்டர் மற்றும் நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட பணம் என்பவற்றைச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் 7 நாட்களுக்கு முடக்கியுள்ளனர்.
முடக்கப்பட்டுள்ள டிராக்டரின் சந்தைப் பெறுமதி 5 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 50 லட்சம்) அதிகம் என்பதுடன், நிதி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபாயும் (ரூ. 1 கோடி) இவ்வாறு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவிற்குப் கிடைத்த இரகசியப் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, சந்தேகநபரின் இந்தச் சட்டவிரோத சொத்துக்களை ஜூலை 24 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 7 நாட்களுக்கு முடக்குவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வலையமைப்பில் தொடர்புடைய ஏனைய நபர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான மேலதிக சொத்துக்கள் குறித்துச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






















