• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க வர்த்தகப் போர் தொடர்பில் -கனடிய பிரதமர்

கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் விவகாரத்தில் எல்லா வாய்ப்புகளும் மேசையில் உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். நாட்டின் குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க கனடா என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யும் என உறுதியளித்துள்ளார்.

சார்லட்டவுனில் வியாழக்கிழமை நடைபெற்ற மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்களின் வருடாந்தக் கூட்டத்தின் இறுதி நாளில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடியப் பொருட்கள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தி வரும் நிலையில், அடுத்த மாதம் புதிய வரிகள் அமலுக்கு வரும் முன் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்காவிற்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை அவர் மறுக்கவில்லை.

கனடா எவ்வாறு பதிலளிக்கிறது என்பதில் தெளிவாக இருப்போம். வரி தொடர்பான அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், எங்களிடம் முழுமையான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், முன்கூட்டியே பதிலடி கொடுப்பது தற்போதைய சூழலில் எதிர்மறையான விளைவையே தரும். மாகாண முதல்வர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒரே திசையிலும், ஒரே நோக்கத்திலும், தீவிரமான உறுதியுடனும் கைகோர்த்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 30 நாள் கெடு தொடர்பாகக் கேட்டபோது, அது ஒரே நேரத்தில் "அழுத்தக் காரணியாகவும் வாய்ப்பாகவும்" உள்ளது எனப் பிரதமர் குறிப்பிட்டதுடன், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஒற்றுமையைப் பேணுவதுமே முக்கிய இலக்கு என குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a Reply