• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யோஷிதவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டது.

இவ்வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உடேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், இன்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவரான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

அவருக்குப் பதிலாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததுடன், விசாரணையை வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

விடயங்களை ஆராய்ந்த பின்னர், இவ்வழக்கு மீதான மேலதிக விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகள் அனைவரும் அடுத்த விசாரணையின்போதும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி பணித்தார்.

தெஹிவளை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் 73 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் கூறி, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 

Leave a Reply