இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதித்த அமெரிக்கா
பொருட்கள் உற்பத்தியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பான விவகாரத்தில், இந்தியாவில் இருந்தும் மற்ற 16 நாடுகளில் இருந்தும் வாங்கப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீத வரிகளை விதித்துள்ளது.
அனைத்து நாடுகளின் மீதான 10 சதவீத கூடுதல் வரிகள் முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் 60 நாடுகள் மீது புதிய வரிகளை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் அறிவித்தார்.
கட்டாய உழைப்பை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தடையை விதிக்கவும் அதை திறம்பட அமல்படுத்தவும் தவறிய 60 பொருளாதார அமைப்புகள் மீது வரிகளை விதிப்பதன் மூலம், அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரில் 1974-ஆம் ஆண்டின் வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் கிரீர் இந்த இறுதி நடவடிக்கையை எடுத்துள்ளதாக USTR அறிக்கை தெரிவித்துள்ளது.
"எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில், மனித உரிமை மீறல் மற்றும் வர்த்தக சிதைவு நடைமுறை ஆகிய இரண்டையும் சரிசெய்யும் நடவடிக்கையாக இது அமையும்" என்று கிரீர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இந்த 10 சதவீத வரி விகிதம் இந்தியா, கனடா, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளுக்கு பொருந்தும். முன்னதாக, இந்தியா 12.5 சதவீத வரி விதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. ஜூன் மாதத்தில் முன்மொழியப்பட்ட வரிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்ததை இது தொடர்பான மத்திய அரசின் குறிப்பு கவனத்தில் கொண்டுள்ளது.
ஜூன் 14 அன்று, கட்டாய உழைப்பை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதியை தடை செய்யும் வகையில் இந்தியா தனது வெளிநாட்டு வர்த்தக கொள்கையை திருத்தியது.
அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட "பரஸ்பர வரிகள்" சட்டவிரோதமானவை என்று பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் இந்த இரண்டு விசாரணைகளையும் தொடங்கியது. அதற்கு பதிலாக, அனைத்து நாடுகளின் மீதும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் வகையிலான 10 சதவீத வரிகளை அந்த நிர்வாகம் விதித்தது.
USTR தொடங்கிய இரண்டு விசாரணைகளையும் இந்தியா எதிர்த்துள்ளதுடன், விவாதத்தில் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தையாகவும் உள்ளது. வர்த்தகத் துறையின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் இருதரப்பு பொருட்கள் வர்த்தகம் சுமார் 141 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இந்தியாவின் ஏற்றுமதி 87.3 பில்லியன் அமெரிக்க டாலராகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.






















