40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கும் அமெரிக்கா – லெபனான் நேரடி விமான சேவை
இலங்கை
அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையில் 40 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1985ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ஆட்சிக் காலத்தில், லெபனானைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் ‘பிளைட் 847’ எனப்படும் அமெரிக்க விமானம் கடத்தப்பட்டது.
அந்த சம்பவத்தின் போது அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து லெபனானுடனான நேரடி விமான சேவையை அமெரிக்கா நிறுத்தியது.
இதனையடுத்து, சுமார் நான்கு தசாப்தங்களாக அமெரிக்கா–லெபனான் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போது குறித்த தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் சந்தித்து கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த டிரம்ப், பல தசாப்தங்களாக லெபனான் பல்வேறு சவால்களையும் துன்பங்களையும் எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், லெபனானுக்கு உரிய மரியாதையும் முழுமையான ஆதரவும் கிடைப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–லெபனான் இடையிலான நேரடி விமான சேவை மீள ஆரம்பிக்கப்படுவது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.






















