• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதல் மரியாதையை விட சிறந்த படம் இருக்க முடியுமா என்று நினைக்கும்போதே.. 

சினிமா

"முதல் மரியாதை"யை விட சிறந்த படம் இருக்க முடியுமா என்று நினைக்கும்போதே "தேவர் மகன்" நெஞ்சில் நிழல் ஆடுகிறது ....
நாம் அனைவரும் சிவாஜி அவர்கள் திரைப்படத்தில் நடிக்க வந்த காலகட்டத்தை முதலில் நினைத்து பார்க்க வேண்டும் .
சிவாஜி அவர்களின் வருகைக்கு முன்னர் , வெற்றி கதாநாயகர்களாக வலம் வர வேண்டுமெனில், அவர்கள் திறம்பட, பாட தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் .
உதாரணம் : தியாகராஜ பாகவதர் ,சின்னப்பா .
அதன் பின்னர் தமிழ்த்திரை மெதுவாக அடுத்த கட்டத்திற்கு , அதாவது பாடலில் இருந்து வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகர தொடங்கியது .

அப்பொழுதைய மக்களுக்கு மேடை நாடகங்களே பொழுது போக்கின் உச்சமாக விளங்கிய காலம் .
அப்பொழுது வெற்றி நாயகர்களாக உலா வந்தவர்கள் அனைவருமே நாடக பின்னணியில் இருந்து வந்தவர்கள் தான் , அதில் மிக பெரும் கதாநாயக அந்தஸ்தும் புகழும் பெற்றவர் சிவாஜி ஆவார்கள் .
மேலும் நாடகத்தில் நடிக்கும் பொழுது நடிகர்கள் வெறும் இயல்பாக பேசி நடித்தால், முன் வரிசையில் இருப்பவர்களுக்கு தான் அவர்கள் பேசுவதும் அவர்களின் நடிப்பும் தெரிய வரும்
கடைசியில் உட்கார்ந்து கொண்டு பார்ப்பவருக்கு நாடகத்தில் வரும் வசனமும் , காட்சிகளும் , நடிப்பும் புரிய வேண்டும் என்றால் நடிகர்கள் சற்றே உச்சஸ்தாயில் தான் பேச வேண்டும் , அப்பொழுது அவர்களின் நடிப்பும் இயல்பை விட சற்று அதிகமாக தான் காணப்படும் .
சிவாஜி அவர்கள் எப்பொழுதுமே தன் கதாபாத்திரத்திற்கு பெரிதும் நியாயம் செய்ய விழைந்த ஒரு உன்னதமான நடிகர் . அத்தகைய சிந்தனையில் அவர் நடிக்கும் பொழுது இயல்பை விட சற்று அதிகமாக நடித்திருக்கலாம் , ஆனால் அதை சரி செய்திருக்க வேண்டிய முழு பொறுப்பும் இயக்குனரையே சார்ந்தது .
அன்றைய காலகட்டத்தில் மானிட்டர் பார்க்கும் வசதியெல்லாம் அறவே கிடையாது. பிலிம் ரோலை லேபில் டெவலப் செய்து பார்த்த பின்னரே, அதில் பதிவாகி இருக்கும் நடிப்பே , நடிகருக்கு தெரிய வரும் . ஆகவே முழு பொறுப்பும் இயக்குனரையே சேரும், ஏனென்றால் டேக்கை ஓகே செய்பவர் அவர்தான் .
இப்பொழுது நடிக்கும் நடிகர்களுக்கு மானிட்டர் பார்த்து கொள்ளும் வசதி ஒரு வர பிரசாதம் ... நடிப்பில் திருப்தி இல்லையெனில் எத்தனை டேக் வேண்டுமானாலும் போகலாம் .
இருக்கும் சின்ன வசதி வாய்ப்புகளை வைத்துக்கொண்டே நம் கண்களுக்கு வீர பாண்டிய கட்டபொம்மன் , கப்பலோட்டிய தமிழன் , மஹாகவி பாரதி , திருப்பூர் குமரன் என்ற சரித்திர நாயகர்களை தத்த்ரூபமாக காட்டியவர், நடிகர் திலகம் அவர்கள் .
மேலும், பணக்காரனாக , ஏழையாக , படித்தவனாக, படிக்காதவனாக , காவலதிகாரியாக , திருடனாக , வக்கீலாக, நீதிபதியாக , ராணுவ வீரனாக , மருத்துவராக, நோயாளியாக ,மாற்று திறனாளியாக , தகப்பனாக , அண்ணனாக , தம்பியாக , நண்பனாக அன்பான கணவனாக , ஆருயிர் காதலனாக இப்படி அவர் நடிக்காத பாத்திரமே கிடையாது .
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்து போல், திருமுருக கிருபானந்த வாரியாரின் பாராட்டு சிவாஜி அவர்களுக்கு யாதெனில் , " என் அப்பன் சிவன் , எப்படி இருப்பார் என்று உங்கள் ரூபத்தில் தான் நான் அறிந்து கொண்டேன் " என்றது தான் .
ஆகவே அவருடையது இயல்பான நடிப்பு , மிகைப்படுத்திய நடிப்பு என்றெல்லாம் ஆராயாமல், சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் நம் தமிழ்நாட்டில் பிறந்ததற்காக நாம் பெருமை கொள்வோம் , அவரை கொண்டாடுவோம்…
திரை உலகின் தவப்புதல்வனையும் ,
நடிப்பில் அவரின் செயற்கரிய சாதனைகளையும் நினைவு கூறுவோம்

 

- பிரசாந்த்!
 

Leave a Reply