• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலைவர் ஸ்டெப்பையும் ஸ்டைலையும் பாத்தீங்களா?

சினிமா

40 ஆண்டுகளுக்கு முன் இலங்கை வானொலியில் ‘அந்தாதி’ என்ற நிகழ்ச்சி பிரபலம். அந்தாதி என்பதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்தான். ஆதி என்றால் ஆரம்பம்,தொடக்கம். அந்தம் என்றால் முடிவு. ஆரம்பமும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதை ஆதி அந்தம் இல்லாதவன் என்று குறிப்பிடுவார்கள். அந்தம்  முடிவு. நம் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதுபவன் எமன் என்பதால் எமனுக்கு அந்தகன் என்ற பெயர் கூட உண்டு.
ஆதி அந்தம் என்பதை திருப்பிப் போட்டால் அந்தாதி. அதாவது அந்தமும் ஆதியும். அதாவது முடிவும் தொடக்கமும். அம்மனைப் போற்றிப் பாடும் 100 பாக்களை அபிராமி பட்டர் எழுதி இருக்கிறார். திருக்கடையூரில் உள்ள அம்மன் அபிராமியை போற்றி அவர் இயற்றிய பாடல்கள் அபிராமி அந்தாதி. அம்மனைப் போற்றும் இந்த அந்தாதியில் ஒரு பாடல் என்ன வார்த்தையில் முடிகிறதோ, அதே வார்த்தையில் அடுத்த பாடல் தொடங்கும். முடிவிலேயே தொடங்குவது அந்தாதி.

இந்த முறையைப் பின்பற்றி இலங்கை வானொலியில் அந்தாதி என்ற நிகழ்ச்சியில் பாடல்களை ஒலிபரப்புவார்கள். ஒரு பாடல் எந்த வார்த்தையில் முடிகிறதோ, அதே வார்த்தையில் அடுத்த பாடலை போடுவார்கள். கேட்க புதுமையாகவும் இனிமையாகவும் இருக்கும்.
மறுவெளியீட்டிலும் வெற்றிக் கொடி நாட்டிய தமிழக மக்களின் இதயக்கனியாம் மக்கள் திலகத்தின் இதயக்கனி படத்தில் இந்த அந்தாதி வகையில் நா.காமராசன் எழுதிய அற்புதமான பாடல். தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும்.. சூப்பர் ஹிட் பாடல். இதில் டி.எம்.எஸ். குரலில் மக்கள் திலகம் பாடும் வரிகள் அந்தாதி வகையில் இருக்கும். அதாவது ஒரு வரியில் முடியும் வார்த்தையில் அடுத்த வரி தொடங்கும்.
எங்கேயோ பார்த்த ஞாபகம்
என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர் காவியம்...
இதில் மலர் காவியம் என்று முடிகிறதா? அடுத்த வரி அதிலிருந்து தொடங்கும்... இப்படி...
மலர்காவியம் எழில் ராணியின் இதழ் நாடகம்...
இதழ் நாடகம் தமிழ் காதலின் புகழ் கோபுரம்..
புகழ் கோபுரம் அகப் பாடலின் சுமை தாங்குமே
சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்....
-------------
தளிர் மேனியில் விரல்பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழைக் கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே முகம் தேடினேன்
முகம் கண்டதும் புது காதலில் நடமாடினேன்...
மிக மிக அற்புதமான பாடல். தமிழ் திரையுலகில் அந்தாதி என்ற வகையில் அபூர்வமான பாடல். இதற்கு பிறகு மூன்று முடிச்சு படத்தில் வசந்தகால நதிகளிலே.. பாடல் அந்தாதி வகையில்  இருக்கும். வேறு ஏதாவது திரைப்படங்களில் அந்தாதி வகை பாடல் இருக்கிறதா என்று தெரியவில்லை.
தொட்ட இடமெல்லாம் பாடல் டிஎம்எஸ், சுசீலாவின் இனிய குரல்களில், மெல்லிசை மன்னரின் கலக்கலான இசையில் வெஸ்டர்ன் கிளாசிக்கல் பாணியிலான பாடல். மத்தியமாவதி ராகம் என்று கர்நாடக இசைஞானம் கொண்டோர் சொல்கிறார்கள். கர்நாடக இசையை மெல்லிசையாக்கி குழைத்துக் கொடுத்த மெட்டும் வித விதமாக பயன்படுத்தியிருக்கும் இசைக் கருவிகளும் சொக்கவைக்கும். கர்நாடக இசைக் கச்சேரிகளில் கடைசியாக மங்களம் பாடி முடிக்கும்போது மத்தியமாவதி ராகத்தில் பாடுவார்கள். முடிவும் ஆரம்பமுமாக அந்தாதியாக வரும் இந்தப் பாடல், படத்திலும் இதுதான் கடைசிப் பாடல். அதைத் தெரிந்தே மத்தியமாவதி ராகத்தை எம்.எஸ்.வி தேர்ந்தெடுத்தாரா என்று தெரியவில்லை. அவரது மேதைமை வியக்க வைக்கிறது.
முக்கியமாக, எம்.ஜி.ரெட் என்ற பெயரில் மாறுவேடத்தில் வரும் மக்கள் திலகம் இந்தப் பாடலில்  வெண்ணிற ஆடை நிர்மலா, ராதா சலூஜா இருவருக்கும் சவால் விடும் வகையில் அந்த வயதில் வெஸ்டர்ன் நடனம் ஆடியிருப்பார். ‘சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்..’ வரியின்போது சாய்ந்தபடி இருக்கும் நிர்மலாவை பின்னாலிருந்து அந்த வரிக்கு ஏற்ப சுமைதாங்கியைப் போலத் தாங்கி பிரேக் டான்ஸ் மாதிரி தத்தித் தத்தி ஸ்டெப்ஸ் போட்டு அவர் செல்வது அட்டகாசம். மறக்க முடியாத மக்கள் திலகத்தின் பாடல்களில் ஒன்று. மக்கள் திலகத்தின் படங்களில் இடம்பெற்ற அந்தாதி பாடல் இது ஒன்றுதான் என்ற வகையிலும் அபூர்வ பாடல்.
இங்கே பதிவிட்டுள்ள புகைப்படம் உதவி, நன்றி.. எஸ்.ஆர்.கோபாலகிருஷ்ணன் சார்.
இந்த சிறப்பு வாய்ந்த பாடல் இடம்பெற்ற.....  மறுவெளியீடுகளிலும் வேறு எந்த நடிகராலும் நெருங்க முடியாத ஏகபோகச் சக்ரவர்த்தியாகத் திகழும் மக்கள் திலகத்தின் இதயக்கனி திரைப்படம், ‘கனி’க்காக கோபித்துக் கொண்டு குமரன் குன்றேறி நின்ற பழனி-யில் சந்தான கிருஷ்ணா அரங்கில் வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.
தலைவர் ஸ்டெப்பையும் ஸ்டைலையும் பாத்தீங்களா?

 

(ஸ்ரீதர் சுவாமிநாதன் பதிவு) 

Leave a Reply