என்றென்றும் மக்களின் இதயக்கனி....
சினிமா
மக்கள் திலகத்திடம் கார் டிரைவராக இருந்தவர் கோவிந்தன். மக்கள் திலகம் முதல்வரான பிறகு ராமாவரம் தோட்டத்தில் இருந்து கோட்டைக்கு அவர் செல்லும்போது கோவிந்தன் தான் காரை ஓட்டிச் செல்வார். முதல்வரின் கார் டிரைவர் என்பதால் கோவிந்தனை அவரது வீட்டில் இருந்து அரசு ஜீப்பில் ராமாவரம் தோட்ட வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள்.
அப்படி ஒரு நாள் ஜீப்பில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது உடலை அதிமுக அலுவலகத்தில் வைக்கச் சொல்லி மக்கள் திலகம் உத்தரவிட்டார். அவரது உடலுக்கு மரியாதை செய்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடந்த டிரைவர் கோவிந்தனின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் திலகம் நடந்தே சென்றார். கோவிந்தன் மனைவிக்கு கருணை அடிப்படையில் வீட்டு வசதி வாரியத்தில் அரசு வேலை வழங்கி உத்தரவிட்டார்.
சின்னப்பா தேவர் உட்பட சில பிரபலங்களின் இறுதி ஊர்வலங்களில் மக்கள் திலகம் நடந்து சென்றிருக்கிறார். என்றாலும், எந்த முதலாளியாவது அல்லது நடிகராவது தனது கார் டிரைவர் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்றதை பார்த்திருக்கிறோமா? கேள்விப்பட்டிருக்கிறோமா? முதலாளி, நடிகர் என்பதை தாண்டி அப்போது மக்கள் திலகம் தமிழகத்தின் முதல் அமைச்சர். ஒரு மாநிலத்தின் முதல்வர் தனது கார் டிரைவரின் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய வரலாறு இல்லை. இனியும் அப்படி எந்த முதல்வரும் இருக்கப் போவது இல்லை.
தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கிய சூப்பர் ஸ்டார். மக்கள் செல்வாக்கு பெற்ற, வலிமையான, தோற்கடிக்கப்பட முடியாத மாநில முதல்வர். முறியடிக்க முடியாத சாதனையாக தொடர்ந்து மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராகி 10 ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்களின் அன்பைப் பெற்றவர்.
இந்த சாதனைகளை எல்லாம் கடந்து மக்கள் மனங்களில் மக்கள் திலகம் அழியாப் புகழுடன் இருக்கிறார் என்றால் அவரது இதுபோன்ற மனித நேய செயல்கள்தான் காரணம். அதனால்தான் இன்றும் மக்கள் அவரை நினைவில் கொண்டு கொண்டாடி வருகின்றனர். அதன் எதிரொலிதான் அவர் திரைப்படங்கள் இன்றும் தமிழகம் முழுவதும் வரவேற்பை பெறுகிறது. சமீபத்தில் டிஜிட்டலில் வெளியான இதயக்கனி திரைப்படம் தமிழகத்தின் பல ஊர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. புதிய படங்களுக்கு சவால்விட்டு சென்னையில் ஆல்பட் திரையரங்கில் 3-வது வாரமாக வெற்றிநடை போடுகிறது.
டிரைவர் கோவிந்தனின் இறுதி ஊர்வலத்தில் நடந்து செல்கிறார் என்றென்றும் மக்களின் இதயக்கனி.
(ஸ்ரீதர் சுவாமிநாதன் பதிவு 21-7-25)























