கற்பதே போராட்டமாக...
கனடா
இன்றைய உலகில் மனித உரிமைகளுள் ஒன்றாக கல்வி உள்ளது. உலகில் வாழும் பல சமூகங்களுக்கு அண்மைக் காலம் வரை கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்ததை நாமறிவோம். இனம், மதம், மொழி, சாதி, பண்பாடு, பாலினம், பிரதேச வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு எனப் பல காரணங்களின் அடிப்படையில் கடந்த காலங்களில் மறுக்கப்பட்ட கல்வி கற்கும் உரிமை இருபதாம் நூற்றாண்டு முதல் அனைத்து மக்களுக்கும் கிடைப்பது பெயரளவிலேனும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. பிள்ளைகளின் கல்விக்கென ஒவ்வொரு அரசாங்கமும் பெருந்தொகையான நிதியை ஒதுக்கீடு செய்து சகலரும் கல்வி கற்கும் வாய்ப்பை உறுதிசெய்ய முயற்சித்து வருகின்றன. வளர்ந்த நாடுகள் என வரையறுக்கப்பட்டுள்ள நாடுகளில் கல்வி வெகுதூரம் முன்னேறி உள்ளதைப் பார்க்க முடிகின்றது. வளர்முக நாடுகளில் படிப்படியாக அந்த முன்னேற்றம் அவதானிக்கப்பட்டு வருகின்றது.
உள்நாட்டுப் போர்கள், இடப்பெயர்வு, வறுமை, பட்டினி, பஞ்சம் எனப் பல காரணங்களால் இன்றைய காலகட்டத்திலும் ஒரு சாராருக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகின்ற போதிலும், கல்விக்கான தேடல் அனைத்துச் சமூகங்களிலும் அவதானிக்கப்பட்டு வருகின்றது. காரணம் எதுவாக இருந்தாலும் சிறார்களுக்கான, பெண்களுக்கான கல்வி கற்கும் வாய்ப்பை மறுப்பது மானுடத்துக்கு விரோதமான செயற்பாடாக உலகின் பெரும்பாலான மக்களால் பார்க்கப்படுகின்றது. அத்தகைய முயற்சிகளுக்கு எதிராகக் கண்டனங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அத்துணை தூரம் கல்வியின் முக்கியத்துவம் தற்கால சமூகத்தில் உணரப்பட்டுள்ளது.
ஆனால், உள்நாட்டுப் போர்கள் நிகழும் ஒருசில நாடுகளில், அடிப்படைவாதக் கொள்கை கொண்டோர் ஆட்சிபுரியும் ஒருசில நாடுகளில் குறிப்பிட்ட வயது வந்தோருக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதையும் பார்க்க முடிகின்றது.
சமூக இழிவிலிருந்து, பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மேலோங்கி வருவதற்கு கல்வி சிறந்த மார்க்கம் என்ற புரிதல் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் கூட பாடசாலைப் பிள்ளைகளைக் கூட்டமாகக் கடத்திச் சென்று கப்பம் கோரும் சம்பவங்களும் நிகழாமல் இல்லை. அத்தகைய சம்பவங்கள் ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் அடிக்கடி நிகழ்வதையும் பார்க்க முடிகின்றது.
எந்தவொரு ஆயுதக் குழுவாக இருந்தாலும் ஏதோவொரு கொள்கையின் அடிப்படையில் போராடுவதாகவே தங்களை அறிவித்துக் கொள்கின்றன. மக்கள் நலன் என்ற அடிப்படையில் ஆயுதம் ஏந்திப் போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் இத்தகைய சில குழுக்கள் சொந்த மக்கள் மீதே வன்முறையைப் பாவிப்பதும், அவர்களைக் கடத்திவைத்துக் கப்பம் அறவிடுவதையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது. அதிலும் பாடசாலைகளில் பயிலும் சிறு குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கடத்திச் செல்வதை என்னவென்று சொல்வது? நைஜீரியாவில் இறுதியாக நடைபெற்ற கடத்தலில் முன்பள்ளியில் பயிலும் இரண்டு வயதுக் குழந்தை கூடக் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி கலக்கம் தருவதாக உள்ளது.
மே மாதம் 15ஆம் திகதி நைஜீரியாவின் 46 மாணவர்களும், ஆசிரியர்களும் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இரண்டு ஆரம்பப் பள்ளிகளிலும், ஒரு இடைநிலைப் பள்ளியிலும் இருந்து அவர்கள் கடத்தப்பட்டிருந்தனர். கடத்தப்பட்ட மாணவர்களின் ஆகக் குறைந்த வயது இரண்டாகவும் ஆகக் கூடிய வயது 16 ஆகவும் இருந்தது. ஆசிரியர் ஒருவர் உடனடியாகவே கொல்லப்பட்டிருந்தார். கடத்தப்பட்ட ஏனையோர் அருகே இருந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். கடின முயற்சியைத் தொடர்ந்து 56 நாட்களின் பின்னர் பணயக் கைதிகள் யாவரும் மீட்கப்பட்டனர். அரச படையினர் மேற்கொண்ட இந்த முயற்சியின் போது எட்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் அரச தரப்பில் சொல்லப்பட்டது.
ஆபிரிக்கக் கண்டத்தில் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடாக நைஜீரியா உள்ளது. அந்த நாட்டில் பல பத்தாண்டுகளாக ஆயுதக் குழுக்களின் வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து பதவியேற்ற அரசாங்கங்கள் திணறி வருவதையும் பார்க்க முடிகின்றது. கடும் பாடுபட்டு ஒரு ஆயுதக் குழுவைச் சமாளித்தால் புதிதாக மற்றொரு ஆயுதக் குழு உருவாகி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. தற்போதைய கடத்தலில் அல்-கைதா ஆதரவுக் குழுவான 'பக்கோ ஹராம்' சம்பந்தப்பட்டுள்ளதாக அரசாங்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் வட கிழக்குப் பகுதியில் தீவிரமாகச் செயற்பட்டு வரும் பக்கோ ஹராம் அடிக்கடி மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாக நாட்டில் சட்டம் ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடத்தல், கப்பம் கோரல் என்பவற்றால் 2024ஆம் ஆண்டில் மாத்திரம் 1.6 மில்லியன் டொலர் வருமானத்தை ஆயுதக் குழுக்கள் ஈட்டியுள்ளதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 15ஆம் திகதி இடம்பெற்ற கடத்தலுக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாட்டின் வடக்குப் பிராந்தியங்களிலேயே அதிக அளவிலான கடத்தல் சம்பவங்கள் பதிவாகி இருந்தன. தற்போது முஸ்லிம்கள் வாழும் தென் மேற்குப் பிராந்தியமான ஓயோவில் கடத்தல் இடம்பெற்றுள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் மேலும் மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக கடத்தப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் மீட்கப்பட்டதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் கப்பம் அல்லது சலுகைகள் ஏதாவது தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் சில தரப்பினரால் எழுப்பப்படுகின்றது. ஏனெனில், மாணவர்களின் கடத்தல் தொடர்பில் முன்னதாக கருத்து வெளியிட்டிருந்த நைஜரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்தோபர் மூஸா, சிறையில் உள்ள தங்கள் சகாக்களை விடுவிக்குமாறு தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கது.
நைஜீரிய வரலாற்றில் பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. 2014ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள சிபொக் பாடசாலையில் பயின்ற 276 மாணவியர் பக்கோ ஹராம் தீவிரவாதக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மிகப் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்தக் கடத்தல் சம்பவத்தின் போது, 57 மாணவிகள் ஒருசில மணி நேரத்திலேயே கடத்திச் செல்லப்பட்ட வாகனங்களில் இருந்து குதித்து காடுகளுக்குச் சென்று மறைந்திருந்து தப்பிக் கொண்டனர்.
பெரும்பாலும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்களாக விளங்கிய மாணவியர் வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டு பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. அதேவேளை, தீவிரவாதிகளுக்குப் போக்குக் காட்டிவிட்டு கணிசமான மாணவியர் தப்பி வந்ததாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின. எனினும் எண்பதுக்கும் அதிகமான மாணவியரின் நிலை என்னவானது என்பது 12 வருடங்கள் கடந்த பின்னரும் இன்றுவரை தெரியாமல் உள்ளது. அவர்களுள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் குழந்தைகளைப் பெற்றுவிட்டு, தீவிரவாதிகளுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டோரும் அடக்கம்.
பாடசாலைப் பிள்ளைகளைக் கடத்திச் செல்லும் தீவிரவாதக் குழுக்களின் செயல்பாடுகள் நைஜீரியாவில் தொடர்ந்த வண்ணமேயே உள்ளன. கடத்தல்களைத் தடுத்துவிடவும், கடத்தப்பட்டவர்களை பேச்சுவார்த்தை மூலமோ, தாக்குதல்கள் மூலமோ விடுதலை செய்யவும் அரசாங்கமும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. உலக நாடுகள் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தேவையான பொருண்மிய மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கடத்தல்கள் தொடரவே செய்கின்றன.
கடத்தப்பட்ட பிள்ளைகளை விடுதலை செய்ய பிள்ளைகளின் பெற்றோர்களும் உறவினர்களும் தினசரி போராடிக் கொண்டிருக்கின்றனர். அதேவேளை, கடத்தப்பட்டு மீட்கப்பட்ட பிள்ளைகள் தங்கள் கடந்த காலத்தை மறக்கவும், நிகழ் காலத்தில் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் வேறு வகையான போராட்டத்தை எதிர்கொண்டு உள்ளனர் என்பதுவும் கசப்பான யதார்த்தமாக உள்ளது.
காலங்காலமாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையைப் பெற்றுக் கொள்ள ஒருசில சமூகங்கள் போராடி வருகையில், கல்வி உரிமை உள்ள ஒரு சமூகத்தில் கல்வியைப் பெற்றுக் கொள்ளப் போராட வேண்டிய நிலையில் நைஜீரியா உள்ளது. இந்த அவலம் எப்போது நீங்குமோ?
சுவிசிலிருந்து சண் தவராஜா























