ஆப்கானிஸ்தானில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தடை - மீறினால் ...கடும் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கம், நீதிபதிகள் உட்பட இராணுவம் மற்றும் சிவில் அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு அதிரடித் தடை விதித்துள்ளது.
ஜூன் 16 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய இராணுவ நீதிமன்ற உத்தரவை மீறி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஊழியர்களின் கையடக்க தொலைபேசிகளை பொதுவெளியில் உடைத்து நொறுக்கப்படும் என்றும், அவர்கள் கடுமையான சட்டப் பூர்வ தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசுத் துறைகளில் பெரும்பாலான கோப்பு பரிமாற்றங்கள், அறிவிப்புகள் வட்ஸ்அப் (WhatsApp) மற்றும் மின்னஞ்சல் மூலம் கையாளப்பட்டு வந்ததால், இந்த திடீர் தடையால் பல மாகாணங்களின் நிர்வாக நடைமுறைகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக அரசு ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்கள் கல்வி மற்றும் ஊடக சுதந்திரம் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியாகவே, மக்களின் தகவல் தொடர்பு சுதந்திரத்தை முடக்கும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்






















