இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் அழியாத மை பூசும் நடைமுறை நீக்கம்
இலங்கை
இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களின் போதும், வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பூசும் பாரம்பரிய நடைமுறையைச் சட்டப்பூர்வமாக முற்றாக நீக்குவதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தின் மூலம், தேர்தல் வாக்கெடுப்பு நிலையங்களின் பணிகள் மேலும் வினைத்திறனாக மாறும் என்றும், அரசுக்கான மேலதிக செலவுகள் பெருமளவில் சேமிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் சட்ட ஏற்பாடுகளின் கீழ், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்தல்களின் போதும், வாக்களிக்க வரும் ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியான தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும், ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட வாக்காளரின் விரலில் அழியாத மை பூசப்பட்டு, அடையாளமிடப்பட்ட பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
இந்த இரண்டு பணிகளினதும் ஒரே முதன்மை நோக்கம், வாக்காளர் ஒருவர் ஒரே தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கள்ளவாக்கு அளிப்பதைத் தடுப்பதாகும்.
எனினும், ஒரே நோக்கத்திற்காக ஒன்றுக்கொன்று வேறான இரண்டு வெவ்வேறான முறைமைகளைக் கையாள்வது வாக்கெடுப்பு நிலையக் கடமைகளின் வினைத்திறனைப் பாதிப்பதுடன், அரசுக்குத் தேவையற்ற மேலதிக செலவுகளையும் ஏற்படுத்துகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து வாக்காளர்களும் செல்லுபடியான அடையாள அட்டையைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அழியாத மை பூசும் நடைமுறை இனித் தேவையில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்துத் தேர்தல் சட்டங்களிலிருந்தும் இந்த மை பூசும் சட்ட விதியை நீக்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, 5 முக்கிய சட்டப் பிரிவுகளை நீக்குவதற்கான சட்டமூல வரைபுகள் தயாரிக்கப்படவுள்ளன.
இத்தீர்மானத்தைத் தொடர்ந்து, இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















