• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி

இலங்கை

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பின் முக்கிய நோக்கமானது, நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது அல்ல என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய வர்த்தமானி விதிகளின் உண்மையான தேவை குறித்துப் பிரதி அமைச்சர் மேலும் விளக்குகையில்,

இறக்குமதி நடவடிக்கைகளுக்காக உள்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செலுத்தப்படும் அனைத்து விதமான கொடுப்பனவுகளையும் முறையாக ஆய்வு செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதன் மூலம், தகுந்த காரணங்களின்றி நாட்டிலிருந்து அநாவசியமான முறையில் அந்நியச் செலாவணி வெளியேறுவது முழுமையாகத் தடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறைகள் என்ற போர்வையில், நாட்டில் சில போலி நிறுவனங்களைப் (Shell Companies) பதிவு செய்து, அவற்றின் மூலமாகச் சில தரப்பினர் சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான அந்நியச் செலாவணியை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்துள்ளமை அண்மையில் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அம்பலமானது என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இனிவரும் காலங்களில் இத்தகைய நிதி மோசடிகளைத் தடுப்பதற்காக, புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி பின்வரும் கடுமையான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இனி பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் போது, சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களின் உத்தியோகபூர்வ முகவரி, வங்கி கணக்கு எண் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்காகப் பணம் செலுத்தப்பட்ட சர்வதேச நாணயம் உள்ளிட்ட அனைத்துத் துல்லியமான தகவல்களும் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டுப் பெறப்பட வேண்டும்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகப் பரிவர்த்தனைக்கும் , சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வங்கியும் ஒரு தனித்துவமான விசேட எண்ணைப் கட்டாயமாகப் பராமரிக்க வேண்டும்.

நிதித்துறையில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply