• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்

இலங்கை

‘டித்வா’ புயல் காரணமாகப் பாரியளவில் சேதமடைந்திருந்த மலையக ரயில் மார்க்கத்தின், நாணுஓயாவிலிருந்து பதுளை வரையான பயணிகள் ரயில் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (ஜூன் 20) முதல் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரப்படவுள்ளன.

ஹட்டனில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் தற்போதைய குறைபாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி இன்று (17) அங்கு விஜயம் செய்திருந்தார்.

இதன் போதே அவர் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

அண்மையில் வீசிய ‘டித்வா’ புயல் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக மலையக ரயில் பாதையின் பல இடங்கள் கடுமையாகச் சேதமடைந்திருந்தன.

இதன் காரணமாக, தற்போது மலையக ரயில் போக்குவரத்தானது பதுளை மற்றும் அம்பேவெல ஆகிய பகுதிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுக்குள் மாத்திரமே தற்காலிகமாக வரையறுக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

புயலினால் நிலச்சரிவு ஏற்பட்டுப் பாதிக்கப்பட்ட ரயில் பாதையின் ஏனைய எஞ்சிய பகுதிகளைப் புனரமைத்து, மீண்டும் வழமைக்குக் கொண்டு வரும் பணிகள் ரயில்வே பொறியியலாளர்களால் தற்போது மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

திட்டமிட்டபடி புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்தால், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் கொழும்பிலிருந்து செல்லும் ரயில்கள் உட்பட நாவலப்பிட்டியவிலிருந்து பதுளை வரையான முழுமையான மலையக ரயில் சேவைகளை வழமை போன்று எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க முடியும் என மஞ்சுள சுரவீரஆரச்சி மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

இச்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை மலையகப் பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply