கோட்டாபய ராஜபக்ஷவின் கைதை தடுக்க கோரிய மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனை
இலங்கை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (18) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோரடங்கிய இருவர் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு இன்று பகல் விசாரணைக்கு வரவுள்ளது.
நீதிமன்றில் இன்று முன்னெடுக்கப்படவுள்ள சட்ட வாதங்கள் மற்றும் சமர்ப்பணங்களின் விபரங்கள் வருமாறு:
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் நாட்டின் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிரதான சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார்.
இதேவேளை, பிரதிவாதிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹார்ஷி ஹேரத் தனது சட்டப்பூர்வ சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில் பொலிஸ் மா அதிபர் , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, சிஐடியின் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) மாதவ குணவர்தன, சட்டமா அதிபர் ஆகிய அதிகாரிகள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள இந்த விசேட மனு மீதான நீதிமன்றின் இன்றைய தீர்மானம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தற்போதைய அரசியல் மற்றும் சட்ட நகர்வுகளில் மிக முக்கியமான ஒன்றாக உற்றுநோக்கப்படுகிறது.






















